கோல்கட்டா : ''துர்கையை சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். சக்தியின் வடிவங்களான பெண்களுக்கு, பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளிக்க, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆண்டுதோறும் துர்கா பூஜை மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, துர்கா பூஜை நேற்று துவங்கியது.கோல்கட்டாவில், சால்ட்லேக் பகுதியில் சிறப்பு பந்தல் அமைக்கப் பட்டு, பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துர்கா பூஜையை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்தார்.
உயிர் தியாகம்
அப்போது, அவர் பேசியதாவது:மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டுக்காக சுயநலமின்றி உழைத்துள்ளனர். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பலர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். இன்னும் சில சாதனையாளர்கள், இந்தியாவின் பாரம்பரியத்தை உலகத்திற்கு எடுத்துச் சென்றனர். நம் நாட்டை, சர்வதேச அளவில் பெருமையடைய செய்தனர். சுதந்திர
போராட்டத்திலும் இந்தியாவை வழி நடத்திய பெருமை, மேற்கு வங்கத்துக்கு உள்ளது.நம் நாட்டின் பலம் மற்றும் ஒற்றுமையை உணர்த்தும் திருவிழாவாக, துர்கா பூஜை உள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், துர்கா பூஜையை கொண்டாடுகிறோம். ஆனாலும், பண்டிகைக் கான உற்சாகம் குறையவில்லை. இதில் பங்கேற்பது, நான் செய்த பாக்கியம்.
சட்ட திருத்தம்
துர்கையை சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். சக்தியின் வடிவமான பெண்களுக்கு, பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளிக்க, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. நம் மகள்களை துர்கையாக பார்க்க வேண்டும். பெண்கள் மேம்பாட்டுக்காக, கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. 'ஜன்தன்' திட்டத்தின் வழியாக, 22 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. பிரசவ கால விடுமுறை, 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்வதற்காக, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். பிரதமரின் பேச்சை, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள, 78 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில், மக்கள் கேட்பதற்காக, பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று, 57வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பிரதமர் மோடி பதிவிட்ட வாழ்த்து செய்தியில், ''அமித் ஷாவுக்கு வாழ்த்துகள்; இந்தியாவின் வளர்ச்சிக்காக, உறுதியாக, கடமையுணர்வுடன் பாடுபடும் ஒருவரை, நாடு பார்த்து வருகிறது' என, குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முதல்கடல் விமான சேவை
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள, சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவற்றுக்கு இடையே, நாட்டின் முதல், கடல் விமான சேவை துவக்கப்பட உள்ளது. சர்தார் படேல் பிறந்த தினமான, அக்., 31ல், இந்த விமான சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE