புதுக்கோட்டை: ''தமிழக மக்கள் அனைவருக்கும், இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.முதல்வர் இ.பி.எஸ்., நேற்று புதுக்கோட்டை வந்தார். வழியில், இலுப்பூரில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில், அ.தி.மு.க., கொடியேற்றினார்.புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய் பகுதியில், குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளை துவங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 300 மாட்டு வண்டிகள், முளைப்பாரிகளோடு, விவசாயிகள் சார்பில், முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரும், அமைச்சர்களும் சிறிது துாரம் மாட்டு வண்டி ஓட்டினர்.பின், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில், 29 புதிய பணிகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், 54 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற, 48 திட்டங்களை துவக்கி வைத்தார். பின், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து, முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்து இருப்பதால், பாதிப்பின் அளவு குறைந்து உள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் எந்த பயனும் இல்லை என்று கூறி வருகிறார்.ஆனால், விராலிமலை ஐ.டி.சி., நிறுவனமே, அ.தி.மு.க., அரசின் சாதனைக்கு சான்று. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம், ஜனவரி மாதத்தில் அடிக்கல் நாட்டி துவங்கப்படும்.கொரோனா நோய் தாக்கத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது, இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன், தமிழக அரசின் சார்பில், அனைத்து பொது மக்களுக்கும், இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு
விராலிமலையில், கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையின் நினைவாக, விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் அடக்கும் வீரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''தமிழகத்தில் அதிகமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவது புதுக்கோட்டை மாவட்டம். கடந்தாண்டு இம்மாவட்டத்தில், 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ''இந்த வீர உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் சிலை, இங்கு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது,'' என்றார்.முன்னதாக, விராலிமலை அருகே செயல்படும் ஐ.டி.சி., நிறுவனத்தின், 100 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கப் பணிகளை, முதல்வர் துவக்கி
வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE