பெ.நா.பாளையம்: சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளையில் முறைகேட்டை தடுக்க, ஓ.டி.பி., எண், அனைத்து இடங்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகத்தை மேற்கொள்கின்றன.எண்ணெய் நிறுவனங்களின் ஏஜென்டுகள், சிலிண்டர்களை பெற்று நாடு முழுவதும், கோடிக்கணக்கான மக்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பதிவு செய்யப்பட்ட மொபைல் போனிலிருந்து சிலிண்டர்களை 'புக்' செய்கின்றனர். அவற்றை ஏஜென்சிகள் புக் செய்து, பில் போட்டவுடன், அது தொடர்பான எஸ்.எம்.எஸ்., புக் செய்த வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வாயிலாக வந்து சேரும். அடுத்த நாள் சிலிண்டர் சப்ளை செய்ய வரும் டெலிவரி நபரிடமிருந்து சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம்.இது, தற்போதைய வாடிக்கையாக உள்ளது.

ஆனால், சில ஏஜென்சிகளிடம் பணியாற்றும் ஒரு சில டெலிவரி ஆட்கள், புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்களை வழங்காமல், முறைகேடாக, வேறு சிலருக்கு அதிக விலைக்கு கொடுத்து விடுவதாக புகார்கள் எழுந்தன.இது போன்ற முறைகேட்டை தடுக்க, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ந்தன. முடிவில், பில் போட்டவுடன், முன்பதிவு செய்த வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி., எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஓ.டி.பி., எண்ணை டெலிவரி நபருக்கு வாடிக்கையாளர் தெரிவித்த பின்னரே, டெலிவரி பாய் சிலிண்டர் வழங்குவார்; ஓ.டி.பி., எண் தராத நபருக்கு சிலிண்டர் வழங்கப்படமாட்டாது.இதனால் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சிலிண்டர் சப்ளையாகும். இந்த புதிய நடைமுறையை சோதனை முயற்சியாக அனைத்து ஏஜென்சிகளும், பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ஒரு சில காஸ் வினியோகஸ்தர்கள் இந்த நடைமுறையை அமல் செய்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியதாவது:இந்த நடைமுறை, சோதனை முயற்சியாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான சிக்னல் கிடைப்பதில், பல இடங்களில் சிக்கல் உள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு ஓ.டி.பி., சென்று சேருவதில்லை. இதனால் தற்போது, கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதியில் நகர்ப்புறங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவை செயல்படும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே, இறுதி கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஓ.டி.பி., இருந்தால் மட்டுமே சிலிண்டர் சப்ளை செய்யப்படும் என்பது சரியான தகவல் அல்ல. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE