கல்லுப்பட்டி: மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குளம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எம்.செங்குளம் கிராமத்தில் (விருதுநகர், எரிச்சநத்தம் அருகே) ராஜலட்சுமி பட்டாசு ஆலை உள்ளது. சிவகாசியை சேர்ந்த சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையை ஆமத்தூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசுகள் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனி வெடிகள் தயாரிப்பின் போது மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக இன்று (அக்.,23) வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. அப்போது அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இறந்தவர்கள் யார் என்பது அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உடல்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் படுகாயமடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம் நிவாரணமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் இரங்கல்
இந்த விபத்து தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!
உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்!
தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை @CMOTamilNadu அரசு உறுதி செய்திடுக! pic.twitter.com/IJddHt9RJu
— M.K.Stalin (@mkstalin) October 23, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE