புதுடில்லி: இந்தியா கிரிக்கெட் அணிக்கு முதல் உலக கோப்பை பெற்று தந்த கபில் தேவ், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர், தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தவர் கபில்தேவ்(61). 1978 முதல் 1994 வரை 16 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள அவர், 1983ல் இந்திய அணிக்கு முதல் கோப்பை பெற்று தந்தார். 131 டெஸ்ட் மற்றும் 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களை குவித்த இவர் 400 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 1990ம் ஆண்டு லார்ட்சில் நடந்த டெஸ்ட் போட்டியில், தொடர்ச்சியாக 4 சிக்சர் அடித்து இந்தியா ‛பாலோ ஆன்' ஐ தவிர்க்க உதவினார். 1992ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பின் வரிசையில் இறங்கி 129 ரன்கள் குவித்தார். இவ்வாறு அவரது சாதனைகள் நீண்டு கொண்டே போகும்.
அப்போதைய காலகட்டத்தில், கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருந்த ரிச்சர்ட் ஹாட்லீ, இயான் போத்தம் மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கு இணையாக இருந்த ஒரே ஆல்ரவுண்டர் கபில்தேவ் மட்டும் ஆவார்.

இந்நிலையில், கபில்தேவ், மாரடைப்பு காரணமாக, டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியான உடன் ஏராளமானோர், அவர் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர். இதனால், டுவிட்டரில், ‛‛KapilDev'' என்ற ஹேஷ்டேக் வைரலானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE