வாஷிங்டன்: வெளிநாட்டு பொறியாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1 பி விசா வழங்க, அதிபர் டிரம்ப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால், அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் 100 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினை சேர்ந்தவர்களுக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்களே இந்த எச்-1 பி விசாக்களை அதிகம் பெற்று வருகின்றனர். நிறுவனங்களுக்கு இடையே மாற்றி கொள்ள எல்1 விசா வழங்கப்படுகிறது. இந்த இரண்டு விசாக்களை வரும் டிச., 31 வரை வழங்க தடை விதித்து, கடந்த ஜூன் 22 அன்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

இதனால், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற 500 நிறுவனங்களுக்கு 100 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் என புருங்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: இந்த தடையால், 2 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களால், பல நிறுவனங்களின் லாபம், உற்பத்தி, உற்பத்தி விரிவாக்கம், கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீடு அதிகளவில் அதிகரித்துள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE