புதுடில்லி: கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மருந்துகளையும், மத்திய அரசே கொள்முதல் செய்து, முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், அதை செயல்படுத்த, சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. முன்னுரிமை அடிப்படையில், உடல் ரீதியாக பலவீனமான பிரிவினரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு, மாநில மற்றும் மாவட்டங்கள் அளவில் தடுப்பூசி போடப்படும். இந்த திட்டத்தின்படி, கொரோனா தடுப்பூசியை, மாநில அரசுகள் தனியாக கொள்முதல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
அனைத்து மருந்துகளையும், மத்திய அரசே கொள்முதல் செய்யும்.முதல் கட்டமாக, 30 கோடி பேருக்கு, தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த, 30 கோடி பேரை அடையாளம் காணும் பணியில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன், மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டியவர்கள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளனர்.
முதலில், டாக்டர்கள் உள்ளிட்ட, ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக, போலீசார் உள்ளிட்ட, இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். மூன்றாவதாக, 50 வயதுக்கு மேற்பட்ட, 26 கோடி பேருக்கும், நான்கா-வதாக, இணை நோய்களுடன் இருக்கும், 50 வயதுக்கு கீழானவர்களுக்கும், தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதற்கான பயனாளிகள் பட்டியலை, நவ., 15க்குள் அனுப்ப, மாநில மற்றும்யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படும் ஒவ்வொரு நபரும், ஆதார் அடிப்படையில் இணைக்கப்படுவர்.இவ்வாறு, மத்திய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE