சென்னை: 'கொரோனா இலவச தடுப்பு ஊசி அறிவிப்பால், தமிழக அரசுக்கு, மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறதே என்ற அச்சத்தால், ஸ்டாலின் வழக்கம் போல, அறிக்கை அரசியல் நடத்துகிறார்' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:நான் அரசு பள்ளியில் படித்தவன். அதனால், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில், பயிலும் மாணவர்களுக்கு தனியாக, உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, உணர்வுப்பூர்வமாக உணர்ந்து அறிவித்தேன்.
கொரோனா தொற்று நிலை பற்றி விவரிக்க, கவர்னரை நேரில் சந்தித்த போது, நீட் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு, விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினேன். இந்த உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு, விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என, அமைச்சர்கள் குழு, கவர்னரை சந்தித்து வலியுறுத்திய போது, இது குறித்து ஆய்வு செய்து, விரைவாக முடிவு செய்வதாக, கவர்னர் உறுதி அளித்துள்ளார்.'நீட்' தேர்வை நாட்டிற்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க., மற்றும் காங்கிரசார், கவர்னருக்கு நான் அழுத்தம் தரவில்லை என கூறுவதற்கு, எந்தவித அருகதையும் இல்லை.வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில், தங்களால் தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க, ஸ்டாலின் கருதினார்.
அந்த எண்ணத்துடன், கவர்னருக்கு கடிதம், அறிக்கைகள் என, ஸ்டாலின் நடவடிக்கைகள் அனைத்தும், அரசியல் ஆதாயம் தேடும் செயல் என, மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
மக்கள் நலன் கருதி, தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட உடன், அனைத்து மக்களுக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என, நான் அறிவித்தேன். இந்த அறிவிப்பால், தமிழக அரசுக்கு, மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறது. இந்த அச்சத்தால், வழக்கம் போல, ஸ்டாலின் அறிக்கை அரசியல் நடத்துகிறார். இதை பார்த்து, தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.இவ்வாறு, இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE