பாட்னா: பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மோடி, கடைசி மூச்சு வரை என் நண்பராக இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான் என புகழ்ந்தார். அதற்கு அவர் மகன் சிராக் பஸ்வான் நானும் அவ்வாறு இருப்பேன் என கூறியுள்ளார்.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மகன் தற்போது லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக உள்ளார். இவரது கட்சி மத்தியில் பா.ஜ., உடன் கூட்டணியில் உள்ளது. ஆனால் சொந்த மாநிலமான பீகாரில் நிதிஷ் குமாரை எதிர்த்து அரசியல் செய்வது என முடிவெடுத்துள்ளார். முதல்வர் கனவில் இருக்கும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். அதே சமயம் பா.ஜ.க., போட்டியிடும் இடங்களில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பிரச்சாரக் கூட்டங்கள் பலவற்றிலும் பிரதமர் மோடியின் ஆசி தனக்கு உள்ளதாகவும், நிதிஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்.
அவரை எதிர்த்தும் பேச முடியாமல், கூட்டணியிலிருந்து நீக்கவும் முடியாமல் பா.ஜ.க., கையை பிசைந்து வருகிறது. ராம்விலாஸ் மறைந்துள்ள நிலையில் அவர் மகனை கூட்டணியில் இருந்து நீக்கினால் எதிர்ப்பு எழும் என பா.ஜ.க அஞ்சுகிறது. இதனால் நிதிஷ் தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று (அக்., 23) பீகாரில் பிரசாரம் தொடங்கிய மோடி, மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் லாலுவின் நெருங்கிய கூட்டாளியான மறைந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகியோரை நினைவு கூர்ந்தார் "பீகார் சமீபத்தில் தனது இரண்டு மகன்களை இழந்துள்ளது. இவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக உழைத்தவர்கள். ராம்விலாஸ் பஸ்வான் ஏழைகள் மற்றும் தலித் மக்களுக்காக பாடுபட்டார். அவரது கடைசி மூச்சு வரை எனது உற்ற நண்பனாக விளங்கினார்." என புகழ்ந்தார்.

இதற்கு உடனடியாக நன்றி தெரிவித்து பஸ்வான் டுவிட் செய்துள்ளார். "உண்மையான நண்பராக பீகார் வந்து எனது தந்தைக்கு மோடி மரியாதை செலுத்தியுள்ளார். எனது தந்தை கடைசி வரை அவருக்கு உண்மையான நண்பராக இருந்ததாக கூறியது உணர்ச்சிவசப்பட வைத்தது. என் தந்தை மீது அன்பும் மரியாதையும் பிரதமர் வைத்துள்ளது மகனாக மகிழ்ச்சி தருகிறது.நானும் கடைசி மூச்சு உள்ளவரை மோடியை விட்டு அகல மாட்டேன் " என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE