சென்னை : மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காததாக ஆளுநரை கண்டித்து டுவிட்டரில் #ஆளுநரின்_அNEETதி என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த கல்வியாண்டிலேயே இதை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். கல்வியாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார் என்று எதிர்க்கட்சி தலைவரான திமுக.,வின் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டி ஆளுநருக்கும் கடிதம் எழுதினார். ஆனால் மசோதாவிற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் இதை கண்டித்து திமுக., சார்பில் தமிழகம் முழுக்க இன்று(அக்., 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. சில நாட்களில் கவுன்சிலிங் துவங்க உள்ளது. ஆனால் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காமல், அதிமுக அரசு அஞ்சுகிறது. இந்த மசோதா நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்'' என்றார்.
இதுஒருபுறம் சமூகவலைதளமான டுவிட்டரில் இந்த விவகாரம் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காததாக ஆளுநரை கண்டித்து #ஆளுநரின்_அNEETதி என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
''அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவராக்கும் கனவை நனவாக்க உடனே மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்க. அநீதி இழைத்தது போதும் உடனே ஒப்புதல் வழங்கிடுக...'' என பலரும் அதிமுக., அரசு மற்றும் ஆளுநருக்கு எதிரான கருத்துக்களையும், நீட் விஷயத்தில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகளையும் நினைவுக்கூர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE