ஆமதாபாத் : ''நாட்டில், விவசாயத்துறை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், விவசாயிகளுக்கு காலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, தடையின்றி, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக, 3,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள, 'கிசான் சூர்யோதய்' திட்டத்தை, பிரதமர் மோடி நேற்று, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக துவக்கி வைத்தார்.
பயிர் காப்பீடு அதிகரிப்பு
மேலும், குஜராத்தில் சுற்றுலா பயணியருக்காக, கிர்னார் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'ரோப் கார்' திட்டம், ஆமதாபாதில், குழந்தைகள் இதய மருத்துவமனையையும் துவக்கி வைத்தார்.அப்போது, அவர் பேசியதாவது:விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்க, அரசு கடமைப்பட்டுள்ளது. உற்பத்தி செலவையும், அவர்களது கஷ்டங்களையும் குறைக்க, விவசாயத்துறையை வலிமைப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.தங்கள் பொருட்களை, நாட்டின் எந்த பகுதியிலும் விற்க, விவசாயிகளுக்கு சுதந்திரம், நிறுத்தி வைக்கப்பட்ட பாசன திட்டங்களை உடனே நிறைவேற்றுதல், பயிர் காப்பீடு அதிகரிப்பு என, விவசாயத்துறையை வலிமைப்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.குஜராத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலை, இப்போது மாநிலத்தின் பிரதான சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
ஐந்தாவது இடம்
கொரோனா பரவலுக்கு முன், சிலை திறக்கப்பட்டு, 15 மாதங்களில், 45 லட்சத்துக்கும் அதிகமானோர், அதை பார்த்து ரசித்துள்ளனர். நாட்டிலேயே, குஜராத்தில் தான், 2010ல், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது சூரிய மின்சக்தி உற்பத்தியில், இந்தியா முன்னேற்றம் அடையும் என, யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும், பயன்பாட்டிலும், சர்வதேச அளவில், இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது. தட்டுபாடின்றி மின்சாரம் கிடைக்கும் நிலையில், விவசாயிகள், தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE