சென்னை : ''மருத்துவ கல்வி இட ஒதுக்கீடு விவகாரத்தில், அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
அவரது பேட்டி:
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, கவர்னரை சந்தித்தோம். இப்பிரச்னையில் நல்ல முடிவு எடுப்பதாக அவர் கூறியுள்ளார்; கால அவகாசம் கேட்டுள்ளார். இதனால், அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், நாங்கள் சொல்லித் தான் வந்தது என, பெயர் எடுப்பதற்கான நாடகம் இது.
தி.மு.க.,வை பொறுத்தவரை, இது தொடர்பாக சட்டசபையில் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அ.தி.மு.க., அரசு தான் இந்த சட்டத்தை கொண்டு வந்தது.'அரசியல் செய்யாமல், அவியலா செய்ய முடியும்' என ஸ்டாலின் கேட்கிறார். இப்பிரச்னையில், அவர் அரசியல் செய்வதை, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். யாரும் சாப்பிட முடியாத அவியல் கட்சியாக, தி.மு.க., உள்ளது.
மத்தியில், 17 ஆண்டுகள் அங்கம் வகித்தபோது, கவர்னர் பதவியை நீக்க, தி.மு.க., ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.உலகம் தோன்றியது முதலே, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு உள்ளது. பெண்களை போற்ற வேண்டும்; துாற்றக்கூடாது. பெண்களை இழிவாக பேசியதால், திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மனுநீதி என்பது ஒருவர் எழுதியது. அதை வைத்து பெண்களை கேவலப்படுத்துவதை ஏற்க முடியாது.இவ்வாறு, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE