சென்னை : ''அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் செய்யாமல், பின்னே என்ன அவியலா செய்வோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.
மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காததையும், அ.தி.மு.க., அரசு அழுத்தம் தர தவறியதையும் கண்டித்து, சென்னையில், நேற்று கவர்னர் மாளிகை முன், தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்; அதில், முழுமையாக வெற்றி பெறுவோம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, கவர்னரை ஒப்புதல் கொடுக்க வைக்க, என்னென்ன வழி உண்டோ, அத்தனையையும், தி.மு.க., மேற்கொள்ளும். இதில், ஸ்டாலின் அரசியல் செய்வதாக, முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சி என்றால், அரசியல் செய்யாமல், பின்னே என்ன அவியலா செய்து கொண்டிருக்கும்?
இது, முதல்கட்ட போராட்டம்; இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை, தி.மு.க., தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
வழக்கு வாபஸ் பெற வேண்டும்!
ஈ.வெ.ரா.,வும், அம்பேத்கரும், காலம் காலமாக, என்ன கருத்துகளை எடுத்துச் சொல்லி, இந்த மண்ணில் விழிப்புணர்வை உருவாக்கினரோ, அந்த வரலாற்று பின்னணியை தான் திருமாவளவன் எடுத்துரைத்திருக்கிறார்.மக்கள் தொகையில் சரிபாதியாகவும், அதற்கும் கூடுதலாகவும் உள்ள பெண்களின் உரிமைகள், பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை, சனாதன, வருணாசிரம, மனுஸ்மிருதிகளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.
இதைத் தான், ஈ.வெ.ரா.,வும், அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுதும் பரப்புரை செய்தனர். அதுகுறித்து, திருமாவளவன் பேசியதை, திரித்துச் சொல்வதற்காக, அதை வெட்டி, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் வன்முறையை துாண்ட நினைக்கும், மதவெறி அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, அதற்கு நேர்மாறாக, திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தப் பொய் வழக்கை, உடனே திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE