''பஞ்சாபில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட தலித் சிறுமியின் குடும்பத்தினரை சந்திக்க, ராகுலும், பிரியங்காவும் ஏன் செல்லவில்லை,'' என, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் ஆதாயம்
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:பீஹாரில் இருந்து, பஞ்சாப்புக்கு குடிபெயர்ந்த தொழிலாளியின், 6 வயது குழந்தை, ஹோஷியார்பூர் மாவட்டத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்ப்லா, அந்த சிறுமியின் குடும்பத்தினரை, சமீபத்தில் சந்தித்தார். காங்., பொதுச் செயலர் பிரியங்கா மற்றும் ராகுல் உள்ளிட்டோர், அந்த ஏழை தலித் தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திக்க செல்லவில்லை. காங்., தலைவர் சோனியா, அறிக்கை கூட வெளியிடவில்லை.
காங்., ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நடக்கும் அராஜகங்களை, அவர்கள் கண்டுகொள்வது இல்லை. ஆனால், உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து, புகைப்படம் எடுத்து, அதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தவே, ராகுலும், பிரியங்காவும் விரும்புகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:பீஹார் சட்டசபை தேர்தலுக்காக, காங்.,குடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், இது குறித்து, ராகுலிடம் கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்.
மோசமான நிலை
காரணம், அவர்களது முந்தைய ஆட்சியில், பீஹாரில் பெண்களின் நிலைமை, இதைவிட மோசமாவே இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஒப்பிட முடியாது!
ஹோசியார்பூர் பாலியல் பலாத்கார வழக்கை, ஹத்ராஸ் சம்பவத்துடன் ஒப்பிட முடியாது. ஹத்ராசில், குற்றவாளிகள் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. ஹோசியார்பூர் வழக்கில், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர், காங்கிரஸ். - நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE