சிறு வயதில், பள்ளியில் நான் படித்த ஆங்கில கவிதை, இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. எட்வின் மியுர் என்ற ஆங்கில கவிஞர் எழுதிய, 'விக்கட் கேட்' எனும், திட்டி வாசல் என்ற பொருளிலான கவிதை அது. ஒரு கோட்டை, எதிரிகளால் சூழப்பட்டு, அவர்கள் கையில் சிக்கியதை, அந்த கவிஞர் எழுதியிருப்பார்.
அந்த கோட்டை மிகவும் பலம் வாய்ந்தது. நிறைய காவலர்கள் இருந்தனர். உணவும் தேவையான அளவு இருந்தது. எதிரிகளால் வெற்றி கொள்ள முடியாது என, அதன் தலைவன் நினைத்துக் கொண்டு இருந்தான்.ஆனால், மிக எளிதாக, அந்தக் கோட்டை, எதிரிகள் வசமாகி விட்டது. அந்த சோகத்தில், இறுதியில் எழுதியிருப்பார், 'எங்களின் உண்மையான எதிரி, பணம் மட்டுமே. அதனுடன் போராட எவ்வித ஆயுதமும் எங்களிடம் இல்லை' என்று!அதாவது, அந்த கோட்டையில் உள்ள சிறிய திட்டி வாசலில் காவலுக்கு இருந்தவர், பணத்திற்கு ஆசைப்பட்டு, எதிரிக்கு கதவை திறந்து விட்டு விட்டார் என்று, நாசுக்காக சொல்லிருப்பார்.
எங்கே செல்கிறது
பணத்தை வாங்கி,அந்த திட்டி வாசலின் கதவை திறந்து, தன் நாட்டின் அழிவுக்கு காரணமாக இருந்த அந்த காவலருக்கு, கொஞ்சம் கூட குறைந்தவர்கள் அல்ல, நம் அரசு ஊழியர்கள்.சில நாட்களுக்கு முன், வேலுாரில், மாசுக் கட்டுப்பாட்டு துறையின் அதிகாரி பன்னீர்செல்வம் என்பவரிடம் இருந்து, 3.25 கோடி ரூபாய், 450 சவரன் தங்கம் மற்றும் 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு சின்ன மாவட்டத்தின், சாதாரண அதிகாரியே, இவ்வளவு கோடிகளை குவித்திருந்தால், மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன; எத்தனை, 'பிச்சைக்கார' அதிகாரிகள் உள்ளனர்; அவர்கள் குவித்த சொத்துகள் எவ்வளவு என கணக்கிட்டால், மலைப்பு ஏற்படுகிறது.பென்ஷனுக்காக, 23 ஆண்டுகளாக, ஒரு தியாகியை அலைய விட்டவர்கள் தான் இவர்கள்.
'உழவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்ற நிலையில், சேற்றிலும், மழையிலும் கஷ்டப்பட்டு, தன் பிள்ளையை விட கவனமாக வளர்த்து, அறுவடை செய்து கொண்டு வரும் விவசாயியிடம், நெல்லை வாங்குவதற்கு, கூசாமல் காசை கேட்பவர்கள் தான் இவர்கள். இளம்பெண்கள் திருமணத்தின் போது, 1 சவரன் தங்க நகையாவது அணிய வேண்டும்; குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாயாவது, திருமண செலவுக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, 1 சவரன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்குகிறது.
எவ்வளவு அருமையான எண்ணம்; எவ்வளவு மனிதாபிமானத்துடன் நம் தலைவர்கள் இந்த திட்டத்தை தயாரித்துள்ளனர்... எனினும், குரங்கு கையில் மாலையை கொடுத்தது போல, இந்த அருமையான திட்டத்திலும், நம் அரசு ஊழியர்கள் கை வைத்து, அதிகபட்சம், 30 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. எங்கே செல்கிறது, நம் நாடு...அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்களுக்கு, தாங்கள் பார்க்கும் வேலைக்கு, அரசு சம்பளம் தருகிறது என்பதையே மறந்து விடுகின்றனர். லஞ்சம் கொடுத்தால் தான், கோப்புகள், 'ஓகே' ஆகும் நிலை காணப்படுகிறது.சமீபத்தில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சென்றிருந்தேன்.
இயல்பாக, அமைதியாக, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய தலைமைச் செயலகத்தில், கரை வேட்டி கட்டிய கட்சியினர், நுாற்றுக்கணக்கில் குவிந்திருந்தனர்.ஒவ்வொரு அமைச்சர் அலுவலக வாயில் முன்பும், பணம் பிடுங்கிகள் போல, ஏராளமான ஏஜன்டுகள் நிற்கின்றனர். எவ்வித கூச்சமும், நாச்சமும் இன்றி, 'அதற்கு இவ்வளவு பணம் கொடுத்தேன்; அவருக்கு இவ்வளவு பணம்; இவருக்கு இவ்வளவு பணம்' என, பேசியதை கேட்க முடிந்தது.'அட பாவிகளா...அப்பாவிகள் வயிற்றில் அடித்து, உங்கள் வயிற்றை நிரப்புகிறீர்களா...' என, சத்தமாக கேட்கத் தோன்றியது. தலைமைச் செயலகம் தான் இப்படி, இப்போது தான் இப்படி என்றில்லை. இதற்கு முந்தைய அரசில், நிலைமை இதை விட மோசம் என்கிறார், தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும், பத்திரிகையாளர் ஒருவர்.சாதாரண, வி.ஏ.ஓ., அலுவலகம் துவங்கி, தலைமைச் செயலகம் வரை, நிலைமை இப்படித் தான் உள்ளது.
பணம் கொடுத்தால் தான் கையெழுத்து, இல்லாவிட்டால் அலைக்கழிப்பு என்பது அங்கிருக்கும் பெரும்பாலான ஊழியர்களின் கொள்கை. நீர்நிலைகளில் நடக்கும் மணல் கொள்ளை; மலைகளில், 'கிரானைட்' போன்ற கற்களை வெட்டி எடுப்பது; விளைநிலங்களை பிளாட்டாக மாற்றுவது; நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது என்பது போன்ற, சட்ட விரோதமான செயல்களை, எந்த கூச்சமும் இல்லாமல் பலர் செய்கின்றனர். அவர்களுக்கு, அரசு அதிகாரிகள் ஒத்துழைக்கின்றனர்.இப்படியே சென்றால், நம் நாடு, எதிர்காலத்தில் என்னவாகும் என, நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக உள்ளது.லஞ்சம் வாங்கும் கீழ்நிலை அலுவலர்கள், அந்த முறைகேட்டிற்கு சொல்லக்கூடிய காரணங்களில் ஒன்று, அவர்களுக்கு மேலே இருக்கும் அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்பது தான். அது, ஓரளவிற்கு உண்மையும் கூட.
ஆட்டின் தொடைக் கறி
அரசு விழாவாக இருந்தாலும் சரி அல்லது அமைச்சர்கள் வருகை தரும் போதும் சரி, அவர்களின் அனைத்து செலவுகளையும், அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் போன்றவர்கள் தான் செய்ய வேண்டும்.இதோடு மட்டுமில்லாமல், மேலதிகாரிகளின் செலவையும், இவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டு குழந்தைக்கு மாட்டும், 'டயபர்' முதற்கொண்டு, 'கரன்ட் பில்' வரை, அனைத்து செலவுகளையும், கீழ்நிலை அலுவலர்கள் தான் செய்ய வேண்டும். இதை விட கொடுமை என்னவென்றால், சிலர் இரவு, 11:00 மணிக்கு, அப்போது கறந்த பசும்பாலில் காபி போட்டு வாங்கி வரச் சொல்வர். இன்னும் சிலர், ஆட்டின் தொடைக் கறி தான் வேண்டும் என்பர். அவர்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்து விட்டால், ஒரு பெரிய லிஸ்டை கொடுத்து விடுவர். இப்படி ஒவ்வொருவரும் கேட்கும் பொருளை, முகம் கோணாமல் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
அந்த கீழ்நிலை ஊழியர் வாங்கும் சம்பளம் அதற்கு பத்தாது. மேலும், யாரும் தன் சொந்த பணத்தை செலவு பண்ண வேண்டும் என்பதற்காக, அரசு வேலைக்கு வரப் போவதில்லை. இந்த மாதிரி செலவுகளுக்கு என, அவர்கள் லஞ்சம் வாங்க துவங்குவர். இந்த மாதிரி செலவுகளை ஈடுகட்ட, தங்களிடம் கையெழுத்துக்கு வரும் நபர்களிடம் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் செலவு பண்ணுவது, 100 ரூபாய் என்றால், வாங்கும் லஞ்சம், குறைந்தது, 1,000 ரூபாயாவது இருக்கும். இத்தனைக்கும், தினமும் செய்தித்தாளை எடுத்து பார்த்தால், 'அடங்க மாட்டுறாங்கப்பா' என்ற தலைப்பில், யாராவது ஒரு அதிகாரியாவது, லஞ்சப்புகாரில் சிக்கிக் கொள்வதை பார்க்க முடிகிறது.
வாரம் குறைந்தது, இரண்டு அலுவலகத்திலாவது, லஞ்ச ஒழிப்பு துறையினர், 'ரெய்டு' நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். எனினும், யாரும் லஞ்சம் வாங்குவதை குறைக்கவில்லை. அதற்கு காரணம், மற்றவர்கள் தான் மாட்டுவர்; நாம் சிக்க மாட்டோம் என்ற அசட்டுத் தைரியம் தான். மேலும், 'யாரும் பண்ணாத தப்பையா நாம் பண்ணுகிறோம்...' என்ற எண்ணம் மறுபுறம். லஞ்சம் வாங்குவது அசிங்கமான குற்றம் என, இங்கு பெரும்பாலானோருக்கு உறைப்பதே இல்லை. பண்ணுவது தப்பு என்ற குற்ற உணர்வு சிறிது கூட இல்லை. ஒரு நாட்டின் நிர்வாகம், ஆரம்பமாவது கிராமத்தில் இருந்து தான். ஊழலை ஒழிக்க வேண்டுமானால், கிராமத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு யானையால் பயிருக்கு ஏற்படும் பாதிப்பை விட, நுாற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பு தான் அதிகம். அரசியல்வாதிகளை ஐந்து ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்பலாம். ஆனால், அரசு அலுவலர்கள், 60 வயது வரை பணியில் இருப்பர். அந்த காலம் வரை, லஞ்சம் வாங்கினால், நாடு என்னவாகும்...கீழ்நிலை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு செலவு வைப்பதை, மேல் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
மேலும், ஒரு ஆண்டிற்கு மேல், யாரையும் ஒரு இடத்தில் வேலை பார்க்க விடக் கூடாது. மிகவும் அத்தியாவசியம் தவிர்த்து, பிற ஒப்புதல்களை, விண்ணப்பதாரரே சுயமாக அளிக்க, அனுமதிக்க வேண்டும். ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், திருமண சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை, அவரவர்களே, ஆன்லைனில், எத்தனை முறை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள வழி ஏற்படுத்த வேண்டும்.லஞ்சம் வாங்கினால், பணியிலிருந்து நீக்கி விட வேண்டும். இதனால், பிறர் லஞ்சம் வாங்க அஞ்சுவர். இதுபோன்ற கடுமையான சட்டங்கள் மூலம் தான், லஞ்சத்தை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.அரசியலில் நேர்மையான பலர் இருக்கின்றனர். ஆனாலும், சில கட்சிகளின் தலைவர்கள், முறைகேடான விதங்களில் பணத்தை குவிக்கின்றனர். அதைப் பார்த்து, 'இவரே லஞ்சம் வாங்கியுள்ளார்; நாம் வாங்கினால் என்ன...' என, சிலர் நினைக்கின்றனர்.
எதிர்பார்த்திருப்போம்
சில பிரதமர்கள், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் புகார்கள் கூறப்படுவதால், சாதாரண அரசு ஊழியர்களுக்கும், லஞ்சம் வாங்குவது தவறில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.எனவே, மேல் மட்டத்தில் இருப்பவர்கள், சுத்தமாக இருக்க வேண்டும். கீழ் மட்டத்தில் இருப்பவர்கள், கை சுத்தமாக இருக்க, பழகிக் கொள்ள வேண்டும்.ஒரு தமிழ் மாதப் பத்திரிகையில், 1960ம் ஆண்டில் வந்த, 'ஜோக்' ஒன்றை, சமீபத்தில் பிரசுரித்திருந்தனர். அதில் லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள், புகார் கொடுப்பதற்காக வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர்.
வரிசையில் பின்னால் நிற்கும் ஒருவர், அங்குள்ள பியூனைக் கூப்பிட்டு, அவரிடம் பணத்தைக் கொடுத்து, 'என்னை விரைவில் உள்ளே அனுப்ப முடியுமா...' என்று கேட்பதாக இருக்கும்.அந்த நிலை, 60 ஆண்டுகளுக்கு முன் மட்டுமல்ல, இப்போதும் பொருத்தமானதாகத் தான் இருக்கிறது.எனக்குத் தெரிந்த பெண், வருவாய் ஆய்வாளர் இருந்தார். பணம் வாங்காமல், யாருக்கு வேண்டுமானாலும், சான்றுகளுக்கு கையெழுத்து போடும் பழக்கம் உள்ளவர்.பணம் கொடுத்து பழக்கப்பட்ட மக்கள், அந்த பெண் அதிகாரியிடம், கையெழுத்து வாங்கி விட்டு, அங்கிருக்கும் மற்றொரு அதிகாரியிடம், 'இந்த அம்மா, 'பீஸ்' வாங்காம கையெழுத்து போடுதே; இந்தக் கையெழுத்து செல்லுபடியாகுமா...' என, கேட்பர். அந்த அளவுக்கு, லஞ்சம் கொடுக்காமல், அரசாங்கத்தில் எந்த வேலையையும் முடிக்க முடியாது என்ற எண்ணம், மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது.
இதற்கு காரணம், அரசு ஊழியர்கள் தான்.தனியார் நிறுவனங்களில், இரவு, பகலாக, நியாயமாக, லஞ்சம் எதுவுமின்றி வேலை பார்த்து, மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மத்தியில், அரசு உத்யோகம் பெற்றவர்கள், அதை, 'இறைவனின் கருணை' என எண்ணி, நியாயமாக செயல்பட வேண்டாமா...தங்களை நாடி வரும் அப்பாவி மக்களுக்கு, ஓடிப்போய் உதவிகள் செய்ய வேண்டாம்; வீணாக அலைக்கழிக்காமல், உண்மை நிலவரத்தை கூறி, நியாயமான உதவிகளை லஞ்சம், ஊழலின்றி செய்யலாமே. இந்த மனப்பான்மை எப்போது வருகிறதோ, அப்போது தான், அரசு நிர்வாகம் நியாயமாகும். அந்த நாளை, எதிர்பார்த்திருப்போம்!தொடர்புக்கு: அழகர், சமூக ஆர்வலர், இ-மெயில்: kumar.selva28769@gmail.com-அழகர்சமூக ஆர்வலர்