வாஷிங்டன் :'இந்தியா அமெரிக்கா அமைச்சர்களுக்கு இடையே, டில்லியில் நாளை மறுநாள் நடக்கவுள்ள, அமைச்சர்கள் சந்திப்பின் போது, உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளின் சர்வதேச ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து விவாதிக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்திய -- அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் மட்டத்திலான சந்திப்பு, 2018ல் துவங்கப்பட்டது. இதன் மூன்றாம் ஆண்டு சந்திப்பு, நாளை மறுநாள், டில்லியில் நடக்கவுள்ளது.இதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர், நாளை டில்லி வருகின்றனர்.
இந்த சந்திப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்த சந்திப்பில், பொது சுகாதாரம் மற்றும் இந்தோ -- பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்படுதல், பொருளாதார ஒத்துழைப்பு, மக்களிடையிலான உறவு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு நல்லுறவு ஆகிய நான்கு அம்சங்கள் முக்கிய இடம் பெறும்.
வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுத்து, இருதரப்பு வர்த்தக உறவை மீண்டும் சரியான பாதையில் வழிநடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தியாவில், 3,750 கோடி ரூபாய் முதலீடுகள் கொண்டு வர, அமெரிக்க சர்வதேச நிதி மேம்பாட்டு கழகம் உறுதி அளித்துள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்வதற்காக, மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், நிர்வாக இயக்குனரை அந்நிறுவனம் சமீபத்தில் நியமித்துள்ளது.கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பணியில், ஆறுக்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள், இந்திய சீரம் நிறுவனம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதற்கு, அமெரிக்க சுகாதார மேம்பாட்டு அமைப்புகளான, நோய் தடுப்பு மையம், தேசிய சுகாதார நிறுவனம், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் உள்ளிட்டவை, தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகின்றன.இமயமலை முதல் தென் சீன கடல் பகுதி வரையில், சீனாவின் அத்துமீறலை சமாளிக்க, முன் எப்போதும் இல்லாத வகையில், இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னைகளை, அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது.அங்கு நிலைமை கைமீறிப் போவதை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்த சந்திப்பில், உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளின் சர்வதேச ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது மற்றும் சாதனைகளை மறுசீராய்வு செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE