பாட்னா: பீஹாரில் தேர்தல் பிரசாரத்தின்போது எம்.எல்.ஏ., வேட்பாளர் மற்றும் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டவரை கூட்டத்தினர் அடித்துக்கொன்றனர்.
பீஹாரில் வரும் அக்.,28, நவ.,3, 7ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஷியோஹர் சட்டசபை தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஜனதா தளம் ராஷ்டிரவாதி கட்சியின் எம்.எல்.ஏ., ஸ்ரீ நாராயண் சிங், 45, என்பவர் நேற்று (அக்.,24) மாலை பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் நாராயண் சிங் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அவரும், அவரது ஆதரவாளர் ஒருவரும் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூட்டத்தினரால் அடித்து கொல்லப்பட்டார். படுகாயமடைந்த நாராயண்சிங் மற்றும் ஆதரவாளரை மருத்துவமனை கொன்று சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறியதாவது: சுட்டுக்கொல்லப்பட்ட நாராயண் சிங் மீது ஏற்கெனவே மூன்று டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கொலைச் சம்பவம் இருதரப்பு யுத்தம் போன்று நடந்துள்ளது. அப்பகுதியில் துணை ராணுவப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE