புதுடில்லி : கடன்களுக்கான மாத தவணை செலுத்தும் கால அவகாசத்தையும், வங்கிகளின் வட்டிக்கு வட்டி தள்ளுபடியை மேலும் சில மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பலரும் சமூகவலைதளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச்சில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலை இழந்தனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளை குறைக்கும் வகையில், மத்திய அரசு பல சலுகைகளை வெளியிட்டது. அதில் வங்கிகளில் வாங்கியுள்ள கடனுக்கான, இ.எம்.ஐ., செலுத்துவதை 'மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்களுக்கு, இ.எம்.ஐ., செலுத்துவதை தள்ளி வைக்கலாம் என அறிவித்தது. மேலும் இந்தக்காலக்கட்டத்தில் இஎம்ஐ., தொகைக்கான வட்டிக்கு வட்டி வசூலிக்கவும் கூடாது என கூறப்பட்டது.
சில வங்கிகள் இதை பின்பற்றவில்லை. இதை எதிர்த்து, பல்வேறு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையின் போது, வட்டி மீதான கூட்டு வட்டியை ரத்து செய்வதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான உத்தரவும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி, '2 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மீது விதிக்கப்பட்ட கூட்டு வட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்கள் இடையே நிம்மதியை கொடுத்துள்ளது. அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டன. நோய் தாக்கம் சற்று குறைந்தாலும் முழுவதுமாக தீரவில்லை. நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. பலரும் வேலை இன்றி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால் கடன்களுக்கான இஎம்ஐ., செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகான மாதங்களுக்கான வட்டி மீதான கூட்டு வட்டியையும் ரத்து செய்து நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சமூகவலைதளத்தில் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரும்பாலும், நாங்கள் வேலையிழந்துவிட்டோம், அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுவரை மத்திய அரசு மேற்சொன்ன விஷயங்களை நீட்டிக்க வேண்டும் என்றே பதிவிட்டுள்ளனர். இதனால் டுவிட்டரில் #Moratoriumextension என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE