ரஜினி மீது நம்பிக்கையில்லை

Updated : அக் 26, 2020 | Added : அக் 26, 2020
Share
Advertisement
நடிகர் ரஜினி கட்சி துவங்குவது கேள்விக்குறியாக உள்ளது. 'நிச்சயம் அரசியலுக்கு வருவார்' என, அவரது ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துவிட்ட நிலையிலும், ரஜினியிடமிருந்து கட்சி பற்றி எந்த தகவலும் இல்லை.'ரஜினிக்கும், பா.ஜ.,விற்கும் நல்ல நட்பு உள்ளது' என, கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினி பற்றி கிண்டலாக
டில்லி உஷ், DelhiUsh, Rajinikanth,ரஜினிகாந்த், பாஜ, பா.ஜ., BJP, Amitshah, அமித்ஷா, உள்துறை அமைச்சர் அமித்ஷா,  Homeminister Amitshah, HM Amitshah, Tejashwiyadav, Tejaswi,  தேஜஸ்வி, தேஜஸ்வியாதவ், பீஹார்,  Bihar, RSS, ஆர்எஸ்எஸ்,  பிரதமர்மோடி, PMModi,  Shivsena, சிவசேனா, பகத்சிங் கோஷியாரி, கோஷியாரி

நடிகர் ரஜினி கட்சி துவங்குவது கேள்விக்குறியாக உள்ளது. 'நிச்சயம் அரசியலுக்கு வருவார்' என, அவரது ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துவிட்ட நிலையிலும், ரஜினியிடமிருந்து கட்சி பற்றி எந்த தகவலும் இல்லை.'ரஜினிக்கும், பா.ஜ.,விற்கும் நல்ல நட்பு உள்ளது' என, கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினி பற்றி கிண்டலாக கூறியது, பா.ஜ.,வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, மூத்த மத்திய அமைச்சர்களுக்கு, அமித் ஷாவின் கிண்டல் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த அமைச்சர்கள் ரஜினிக்கு நண்பர்கள். அடிக்கடி இவர்களுடன், ரஜினி பேசுவது வழக்கம். ரஜினி கட்சி துவக்குவது குறித்து கேட்ட போது, 'அவர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்' என்றார், அமித் ஷா. 'ரஜினி தைரியமானவர் இல்லை; பயப்படுகிறார். அவர் மீது கட்சி தலைமைக்கு அதிக நம்பிக்கை இல்லை' என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள். பிரதமர் மோடி மீது, ரஜினிக்கு அதிக மரியாதை இருப்பது உண்மை. ஆனால் கட்சி, கூட்டணி என வரும் போது, சரியான முடிவை எடுக்க வேண்டும் என்கின்றனர்.


கூட்டம் ஓட்டாக மாறுமா?



பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துவிட்டது. இந்த தேர்தல், முதன் முறையாக கொரோனா வைரஸ் காலத்தில் நடப்பதால், பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது, தேர்தல் ஆணையம். ஆனால், மக்கள் எதையும் பொருட்படுத்தாமல், பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு பக்கம், நிதிஷ் குமார்- தலைமையில், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற கூட்டணி. மற்றொரு பக்கம், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி களத்தில் உள்ளன.ஆளும் கட்சி கூட்டணி தான் வெற்றி பெறும் என கூறியவர்கள், இப்போது தேஜஸ்வியின் பிரசாரம், அவருக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். நிதிஷ் குமாருக்கு சரியான போட்டி என்கின்றனர்.'ஜாதி பாகுபாடே இருக்கக் கூடாது' என, அனைத்து கட்சிகளும் கூறினாலும், வேட்பாளர்களை ஜாதி ரீதியாக தான் தேர்வு செய்கின்றனர். வட மாநிலங்களில் ஜாதி அரசியல் மிகவும் அதிகம்; இப்படி ஜாதி அரசியலை வைத்து, முதன் முதலாக, உ.பி.,யில் முதல்வரானவர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.லாலுவின் கட்சி, யாதவ சமுதாய ஓட்டுக்களை வைத்தே அரசியல் நடத்தி வருகிறது. சிறுபான்மையினரும் இந்த கட்சிக்கு, காலம் காலமாக ஓட்டளித்து வருகின்றனர்.ஆளும் கட்சி கூட்டணி, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்கள் ஓட்டுக்களை அள்ள முயற்சித்து வருகிறது. தேஜஸ்வி இப்போது புதிய வியூகத்தை வகுத்துள்ளார். 'ஒய்... ஒய்' என்ற வியூகம் தான், அது. முதல் ஒய், யாதவ சமூகத்தை குறிக்கும். இரண்டாவது ஒய், '-யூத்' எனப்படும் இளைஞர்கள். 'வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு வேலை தரப்படும்' என, வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் இவரது கூட்டங்களுக்கு, மக்கள் அலை மோதுகின்றனர். லாலுவைப் போல, எப்போதும் மோடியை விமர்சிக்காமல், நிதிஷ் குமாரை மட்டுமே கடுமையாக தாக்கி வருகிறார் தேஜஸ்வி. ராகுலுடன் இணைந்து பிரசாரம் செய்யும் போது, ராகுல் மோடியை தாக்கினாலும், தேஜஸ்வி அதிகம் மோடியை எதிர்த்து பேசுவதில்லை. 'எதிர்காலத்தில் அரசியல் எப்படியிருக்குமோ... எதற்கு மோடியை தேவையில்லாமல் பகைக்க வேண்டும்' என்ற, முன் எச்சரிக்கை தான் காரணம். 'பீஹாரில், யார் பிரசாரம் செய்தாலும், கூட்டம் அதிகம் வரும்; அதை வைத்து தேஜஸ்வி முதல்வர் ஆகிவிடுவார் என கணிப்பது தவறு' என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.


கருத்து வேறுபாடு


பா.ஜ.,வுக்கு ஆலோசனைகளை வழங்கி, கட்சியை பின் நின்று நடத்துவது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. இதன் அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் மோடி, கவனத்துடன் கேட்டாலும், சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதனால், சமீப காலமாக, பா.ஜ.,வுக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும், பல விஷயங்களில் மோதல் நடந்து வருகிறது. 'மஹாராஷ்டிராவில், சிவசேனாவை, காங்கிரஸ் கூட்டணி பக்கம் போக விட்டது மிகப்பெரிய தவறு' என, ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து கூறி வருகிறது. மாநிலத்தில் உள்ள கோவில்களை திறப்பது குறித்து சமீபத்தில் மஹாராஷ்டிரா கவர்னர் கோஷியாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார்.இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'கவர்னர், இப்படி கடிதம் எழுதியிருக்கக் கூடாது' என, 'பளிச்' என கூறி விட்டார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், கவர்னர் கோஷியாரி. இவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் கடுமையாக உழைத்தவர். 'அவருக்கு எதிராக அமித் ஷா பேசியிருக்க வேண்டாம்' என சீனியர் தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கருதுகின்றனராம். இந்த இரண்டு தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்துக்கு நெருக்கம். 'கவர்னருக்கு எதிராக அமித் ஷா பேசியதிலும் ஒரு காரணம் உள்ளது; இது உத்தவ் தாக்கரேவை குஷிப்படுத்தும். காங்கிரசோடு மோதல் ஏற்பட்டால், சிவசேனா மீண்டும், பா.ஜ., பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்த நோக்கத்தில் தான் அமித் ஷா பேசியுள்ளார்' என்கின்றனர், பா.ஜ., பிரமுகர்கள்.


பா.ஜ.,வுக்கு எழுச்சி!



பா.ஜ., தேசிய பொதுச் செயலராக இருப்பவர், சி.டி. ரவி. கர்நாடகாவைச் சேர்ந்த ரவி, விரைவில் தமிழக, பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. சமீபத்தில், தமிழகத்தில் பல இடங்களுக்கு பயணம் செய்து, இது தொடர்பான அறிக்கையை கட்சி தலைவர் நட்டாவிடம் சமர்ப்பித்துள்ளார் ரவி.'தமிழக கிராமங்களில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகமாகி வருகிறது. ஹிந்துக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது; இது, சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்' என, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளாராம் ரவி.இதையடுத்து, தமிழகத்திற்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய, பா.ஜ., தயாராகி வருகிறது. தமிழகத்தின் முக்கிய கோவில்களை மேம்படுத்துவது, அரசு மருத்துவமனைகளை மாற்றி, நவீன மயமாக்குவது, வறுமையில் வாடும் அர்ச்சகர்களுக்கு பண உதவி என பல திட்டங்கள், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெற வாய்ப்புள்ளதாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X