பல்லியா : நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போரிட பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக உ.பி. மாநில பா.ஜ. தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில பா.ஜ. தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியுள்ளதாவது: ராமர் கோவில் கட்டுமான பணிகளை துவங்கியது மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவை ரத்து செய்தது போலவே எல்லை பிரச்னையில் நம்முடன் தகராறு செய்யும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எப்போது போரிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அதற்கான தேதியையும் அவர் தீர்மானித்து உள்ளார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

அவரது இந்த பேச்சு உ.பி. மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உ.பி.யின் சலேம்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ. - எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா ''கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வதந்திரதேவ் சிங் இதுபோல் பேசியுள்ளார்'' என கூறியுள்ளார்.