நாக்பூர்: “சீனாவை விட, மிகப்பெரிய சக்தியாக இந்தியா விளங்க வேண்டும்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
அதிர்ச்சி
மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க தலைமையகத்தில், விஜயதசமி விழா நேற்று நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள், 50 பேர் மட்டும் பங்கேற்றனர்.அந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:சீனாவுக்கு எதிராக, ராணுவ ரீதியில், இந்தியா எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
சீன ஊடுருவலுக்கு, இந்தியா அளித்த பதிலடியால், அந்த நாடு அதிர்ச்சியில் உள்ளது. சீனாவை விட, மிகப்பெரிய சக்தியாக இந்தியா விளங்க வேண்டும். அனைவருடனும் நட்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதுவே எங்கள் இயல்பு. எனினும், அதை பலவீனம் என்று தவறாக புரிந்து, எங்களை சிதைக்க அல்லது பலவீனப்படுத்த, முரட்டுத்தனமான சக்திகளை பயன்படுத்துவதை, எங்களால் ஏற்க முடியாது. எங்கள் எதிரிகள், இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

எச்சரிக்கை
சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது அல்ல. நம் முஸ்லிம் சகோதரர்களை, சிலர் தவறாக வழிநடத்திச் செல்கின்றனர்.கொரோனா வைரசை பார்த்து, யாரும் அஞ்சவேண்டாம். ஆனால், கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
வைரஸ் அதிகம் பரவினாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் குறைவு. இந்த நெருக்கடியால், வேலையின்மை பிரச்னை எழுந்துள்ளது.பலரும் வேலைகளை இழந்துள்ளனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது, நமக்கு சவாலாக உள்ளது.ஹிந்துத்வா என்பது, அரசியல் சார்ந்ததோ அல்லது அதிகார மையமோ கிடையாது; அது, இந்த நாட்டின் தனித்துவ அடையாளம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE