சென்னை : ''பண்டிகை நாட்களையொட்டி, கூட்ட நெரிசலோடு, காற்றோட்டமில்லாத கடைகளுக்கு சென்றால், கொரோனா தொற்று பரவும்; பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என, பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறினார்.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது, 50 சதவீதம் அளவில் தொற்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,000த்துக்கும் கீழ் உள்ளது. இந்த நிலை தொடர, சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்களுக்கு பின், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: தமிழகத்தில் தற்போது, 40 சதவீதம் பேருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. அதன் காரணாக, 80 ஆயிரம் பேருக்கு பரிசோதித்தாலும், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
நவம்பர் மாதத்திற்குள், நோய் எதிர்ப்பு சக்தி, 60 சதவீதம் பேருக்கு உயரும்; தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு, பொதுமக்களின் பங்கு முக்கியம். அரசின் வழிமுறைகளான, கை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுவதை கடைபிடிக்க வேண்டும்.

பொருட்கள் வாங்க செல்லும்போது, காற்றோட்ட வசதி இல்லாத கடைகளுக்கு செல்வதையும், கூட்ட நெரிசலோடு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவற்றை முறையாக பின்பற்றினால், பண்டிகை நாட்களுக்கு பிந்தைய காலங்களிலும், கொரோனா இல்லாத வாழ்க்கை அமையும்.
மேலும், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் அடுத்து வரும், ஆறு மாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழைகாலம் என்பதால், குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால், கொரோனா, டெங்கு, டைபாய்டு, மலேரியா, எலி காய்ச்சல் பரிசோதனையை, டாக்டர் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டும்; அலட்சியம் வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.