புதுடில்லி : பீஹார் சட்டசபையின் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம், நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. கடைசி நேர ஓட்டுச் சேகரிப்பில், அனைத்து கட்சி தலைவர்களும், தீவிரமாக ஈடுபட்டனர். முதல் கட்ட தேர்தலில், 16 மாவட்டங்களில் உள்ள, 71 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், நாளை துவங்கி, அடுத்த மாதம், 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில், மூன்று கட்டங்களாக நடக்கிறது. நவ., 10ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
போட்டி
இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், விகாஸ்சீல் இன்சான், ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்சா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மஹா கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டிஇடுகின்றன.மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வான் தலைமையிலான, லோக் ஜனசக்தி, தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம், நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா, அவுரங்காபாத் மற்றும் புர்ணியா சட்டசபை தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.முதல்வர் நிதிஷ்குமார், முசாபர்பூர் மற்றும் மாஹ்னார் சட்டசபை தொகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஹஸன்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக, அவரது சகோதரர் தேஜஸ்வி யாதவ், நேற்று பிரசாரம் செய்தார்.
வார்த்தை போர்
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே, கடந்த சில நாட்களாக, வார்த்தை போர் மூண்டுள்ளது.'கடந்த, 15 ஆண்டுகளில், நிதிஷ் குமார் ஓய்ந்துவிட்டார். மக்கள் பணியாற்ற தேவையான சக்தி அவரிடம் இல்லை. அவரது பேச்சை கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர்' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி குற்றம்சாட்டினார்.
'ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில், பீஹார் பின்னுக்கு தள்ளப்பட்டது. வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை' என, நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இளைஞர்கள் ஆதரவு
இந்நிலையில், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், 'பீஹாருக்கு முதலிடம்; பீஹாரிக்கு முதலிடம்' என்ற கோஷத்தை முன் நிறுத்தி செய்துவரும் பிரசாரத்திற்கு, இளைஞர்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட தேர்தல் பிரசாரம், நேற்று மலையுடன் முடிவுக்கு வந்த நிலையில், 16 மாவட்டங்களில், 71 சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதில் மொத்தம், 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 31 ஆயிரத்து, 380 ஓட்டுச்சாவடிகளில், இரண்டு கோடியே, 14 லட்சத்து, 84 ஆயிரத்து, 787 பேர் ஓட்டளிக்க உள்ளனர். முதல்கட்ட தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், 41, பா.ஜ., 29, ராஷ்ட்ரீய ஜனதா தளம், 42, காங்கிரஸ், 21, இடதுசாரிகள், 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
முன் எச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன், பீஹாரில், ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, 1,500 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச் சாவடி என்பது, 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என மாற்றப்பட்டுள்ளது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தபால் மூலம் ஓட்டளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர், தனிமையில் இருப்போர், ஓட்டுப்பதிவு நாளில், கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஓட்டுப்பதிவு நேரம், ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய கையுறைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுப்பதிவு நடக்க உள்ள, 71 தொகுதிகளிலும், போலீசாருடன் துணை ராணுவ படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE