சார்ஜா: ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றி பெற்றது பஞ்சாப். நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பீல்டிங் தேர்வு செய்தார்.
சுப்மன் அரைசதம்
கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், ராணா (0) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய இரண்டாவது ஓவரில் திரிபாதி (7), தினேஷ் கார்த்திக் (0) அவுட்டாகினர். பின் இணைந்த கேப்டன் மார்கன், சுப்மன் கில் ஜோடி வேகமாக ரன்கள் குவித்தது.
4வது விக்கெட்டுக்கு 47 பந்தில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கன் (40), பிஷ்னாய் சுழலில் சிக்கினார். சுனில் நரைன் (6) கைவிட்டார். நாகர்கோட்டி (6), கம்மின்ஸ் (1) நீடிக்கவில்லை. ஐ.பி.எல்., தொடரில் 7வது அரைசதம் அடித்த சுப்மன் கில் 57 ரன்னுக்கு கிளம்பினார். 11 ஓவரில் 101/5 ரன்கள் எடுத்த கோல்கட்டா அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்தது. பெர்குசன் (24) அவுட்டாகாமல் இருந்தார்.

சூப்பர் ஜோடி
எளிய இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு ராகுல், மன்தீப் சிங் நிதான துவக்கம் கொடுத்தனர். ராகுல் (28) அவுட்டாக, 8 ஓவரில் 47 ரன் மட்டும் எடுத்தது. பின் வந்த கெய்ல் ரன்மழை பொழிந்தார். வருண் ஓவரில் 2 சிக்சர் அடித்த கெய்ல், நரைன், பெர்குசன் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். மன்தீப் 6வது அரைசதம் அடித்தார்.
கெய்ல் (51) தன் பங்கிற்கு 30வது அரைசதம் எட்ட, பஞ்சாப் பக்கம் வெற்றி திரும்பியது. 18.5 ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து, இத்தொடரில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றி பெற்றது. மன்தீப் (66) அவுட்டாகாமல் இருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE