சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியின் கொடுமையில் இருந்து, தமிழகத்தை மீட்கத் தயாராவோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, கொளத்துார் கிழக்கு பகுதி, தி.மு.க., நிர்வாகி முரளிதரன் இல்ல திருமண விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: நாம் இன்னும் ஜாக்கிரதையாக, பத்திரமாக இருக்க வேண்டும். கொரோனா முற்றிலும் சரியாகி விட்டதா; அந்த தொற்றை தடுத்து விட்டார்களா; அதற்கான சிகிச்சையை கண்டுபிடித்து விட்டார்களா; அதற்குரிய தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்களுக்குப் பயன்படுத்தும் சுழலை ஏற்படுத்தி உள்ளனரா என்றால், அவை இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். இந்தத் தேர்தலில், நீங்கள் நல்ல முடிவை எடுத்தாக வேண்டும். மத்திய அரசுக்கு அடிமையாக, கூனிக்குறுகி, ஒரு சேவகனாக, அடிமைத்தனமாக இருக்கக்கூடிய ஆட்சி தான், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.,வின் கொள்கை என்ன, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, கமிஷன் கேட்பது. தி.மு.க., கொள்கை நாட்டுக்காகப் பாடுபடுவது, நாட்டு மக்கள் பிரச்னைகளை தீர்க்க; உரிமைகளை மீட்க போராடுவது.
அ.தி.மு.க., ஆட்சியின் கொடுமையில் இருந்து, தமிழகத்தை மீட்க தயாராவோம். அதற்கான வாய்ப்பு வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தான். அதை, நீங்கள் நல்லவகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
திருமண விழாவில் பங்கற்ற ஸ்டாலின், கொளத்துாரில் நடந்து வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்; பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
.
'உரிய அழுத்தம் தர வேண்டும்'
ஸ்டாலின் அறிக்கை: பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினர், இட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும், பட்டயலின சமூகத்திற்காகவும், பிரதமர் காட்ட வேண்டும் என, நாடு எதிர்பார்க்கிறது. இந்த விவகாரத்தில், இரட்டை வேடம் போடாமல், கண் துடைப்பு நாடகம் நடத்தாமல், மருத்துவ கல்விக்கான, அகில இந்திய தொகுப்பு இடங்களில், இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை பெற, அரசியல் ரீதியாக, முதல்வர் இ.பி.எஸ்., உரிய அழுத்தத்தை, பிரதமருக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
'அமைச்சர் நலம் பெற வேண்டும்'
ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு, உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, எக்மோ கருவி வாயிலாக, தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். அமைச்சர் முழு நலம் பெற்று, மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும்' என, கூறியுள்ளார்.
தரக்குறைவாக போஸ்டர்
தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் அறிக்கை:
ஸ்டாலினை கொச்சைப்படுத்தி, பெயர் போடாமல், தரக்குறைவான சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது, தி.மு.க., வினர் கொடுத்த புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல இடங்களில், தரக்குறைவான சுவரொட்டிகளை போலீசார் கிழித்த போதும், கோவை போலீசார் மட்டும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். உள்ளாட்சி துறையை போல, போலீஸ் துறையையும், அவர் குட்டிச் சுவாராக்கி விடுவார் போலிருக்கிறது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE