மதுரை: போலீசாரின் துன்புறுத்தலால், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டதாக, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது போலீசாருக்கு எதிராக, மதுரை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரி ஜெயராஜ், 61; மகன் பென்னிக்ஸ், 30, ஆகியோரை, போலீசார், ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சி.பி.ஐ., தனிப்படை, டில்லியில் இருந்து வந்து, ஜூலை 10 முதல் விசாரிக்கிறது.
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, ஏட்டுகள் முருகன், சாமத்துரை. போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொரோனா தொற்றால், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை ஆக., 9ல் இறந்தார்.தந்தை, மகன் மரணம் தொடர்பாக, கொலை மற்றும் முறையற்று சிறையில் வைத்தல், பொய் சாட்சியம், சாட்சியத்தை மறைத்தல் உட்பட பிரிவுகளில், தனித்தனி வழக்கை சி.பி.ஐ., பதிந்தது. நீதிமன்ற அனுதியுடன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட போலீசாரை காவலில் எடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது.
குற்றப்பத்திரிகை:
இறந்த சிறப்பு எஸ்.ஐ., பால்துரை தவிர்த்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது பேர் மீது, செப்டம்பரில், குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. அதில் தெரிவித்துள்ளதாவது:
ஜெயராஜை, முதலில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பென்னிக்ஸ், ஏன் தந்தையை கைது செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ஜெயராஜை எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தாக்கியுள்ளார்.
இது குறித்து, பென்னிக்ஸ் கேள்வி எழுப்பியதால், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் துாண்டுதலின்படி, தந்தை, மகனை சட்டவிரோதமாக காவலில் வைத்து, ஆடைகளை களைந்து, ஸ்டேஷன் வளாகத்தை பூட்டிவிட்டு, இரவு முழுதும் லத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.தனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு இருப்பதாக, ஜெயராஜ் கெஞ்சியுள்ளார். அதை பொருட்படுத்தாமல், போலீசார் தாக்கியுள்ளனர். ஸ்டேஷன் தரையில் படிந்த ரத்தக்கறையை சுத்தம் செய்யுமாறு, ஜெயராஜ், பென்னிக்சை கட்டாயப்படுத்தியுள்ளனர்.ஸ்டேஷனின் இதர பகுதிகளில் படிந்திருந்த ரத்தக்கறையை, மறுநாள் காலை துாய்மைப் பணியாளர் மூலம் சுத்தம் செய்துள்ளனர். சாட்சியத்தை மறைக்க, உள்நோக்குடன் போலீசார் செயல்பட்டுள்ளனர்.
குப்பபை தொட்டி:
இருவரும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டனர். 'ரிமாண்ட்' செய்ய தகுதியானவர்கள் என, மருத்துவச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ரத்தக்கறைகளுடன் இருந்த ஆடைகளை மாற்றச் செய்து, அதை மருத்துவமனை குப்பைத் தொட்டியில், போலீசார் வீசி எறிந்துள்ளனர்.
இருவரையும் வேறு ஆடைகளை அணிய வைத்து, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இருவரையும் போலீசார் துன்புறுத்தியதால், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. குற்றச்சதி செய்து, இருவருக்கு எதிராக, போலீசார் பொய் வழக்குப் பதிந்துள்ளனர். தடயங்களை அழித்துள்ளனர். ஸ்டேஷனுக்கு செல்லும் முன், இருவர் உடலிலும் எவ்வித காயங்களும் இல்லை. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE