புதுடில்லி: பொருளாதாரத்தை மீட்பதற்காக, இலவச ரேஷன், வரிச் சலுகைகள் உள்ளிட்டவை, மத்திய அரசின் இரண்டாம் கட்ட சலுகை திட்டத்தில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், அனைத்து துறைகளும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்தன. இந்த பாதிப்பை குறைக்கும் வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு சலுகைகள், திட்டங்களை, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுள்ளன. அதனால், தொழில்கள் மீண்டு வருகின்றன. ஆனாலும், பொருளாதார பாதிப்பில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை. இந்நிலையில், இரண்டாம் கட்ட சலுகை திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்து, பல்வேறு கணிப்புகள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலைமையில் பொருளாதாரம் சற்று மேம்பட்டாலும், அது போதுமானதாக இல்லை. மத்திய அரசு அறிவித்த முதல் சலுகை திட்டத்துக்கான காலம் முடிய உள்ளது.
பண்டிகை காலத்தால் விற்பனை மற்றும் நுகர்வு அதிகரித்தாலும், அது வழக்கமான அளவுக்கு இல்லை. மக்கள் இன்னும் அச்சத்திலேயே உள்ளனர். அதனால் செலவு செய்வது குறைவாக உள்ளது. சிலருக்கு போதிய வருவாயும் இல்லை.அதனால், இரண்டாம் கட்ட சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
ஆனால், அது எப்போது, எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை.தற்போதைய நிலையில், இலவச ரேஷன் வழங்குவது, மார்ச் வரை நீட்டிக்கப்படலாம். நகர்ப்புற ஏழைகளுக்கான ஆதரவு திட்டத்தை, இரண்டாம் கட்டத்தில் எதிர்பார்க்கலாம். நுகர்வை அதிகரிக்கும் வகையில், வருமான வரிச் சலுகை அறிவிப்பு வெளியாகலாம். அதேபோல், மொபைல்போன், சிமென்ட், வாகனங்கள் போன்றவற்றுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்படலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்கள் வேகப்படுத்தலாம். அரசு கான்ட்ராக்டர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படலாம். இதுபோன்ற சலுகைகள் மூலம், பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்படுவதை தவிர்த்து, வேகமெடுக்க வைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE