வரப்போற தேர்தல்ல நீயா... நானா! உரசிப்பார்க்குது ஆளுங்கட்சி; கொதிக்குது எதிர்க்கட்சி

Updated : அக் 27, 2020 | Added : அக் 27, 2020
Advertisement
பண்டிகை தொடர் விடுமுறை என்பதால், வீட்டுவராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.கற்கண்டு பொங்கல், பொரி, சுண்டல் கொண்டு வந்த மித்ரா, ''என்னக்கா, தி.மு.க.,காரங்க ரொம்பவே கொதிப்புல இருக்காங்களாமே,'' என, கிளற ஆரம்பித்தாள்.பொங்கலை ருசித்த சித்ரா, ''ரொம்ப டேஸ்ட்டா இருக்கு,'' என, பாராட்டியபடி, ''அதுவா, ஸ்டாலினை சீண்டியும், 23ம் புலிகேசி மாதிரி
 வரப்போற தேர்தல்ல நீயா... நானா! உரசிப்பார்க்குது ஆளுங்கட்சி; கொதிக்குது எதிர்க்கட்சி

பண்டிகை தொடர் விடுமுறை என்பதால், வீட்டுவராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.கற்கண்டு பொங்கல், பொரி, சுண்டல் கொண்டு வந்த மித்ரா, ''என்னக்கா, தி.மு.க.,காரங்க ரொம்பவே கொதிப்புல இருக்காங்களாமே,'' என, கிளற ஆரம்பித்தாள்.

பொங்கலை ருசித்த சித்ரா, ''ரொம்ப டேஸ்ட்டா இருக்கு,'' என, பாராட்டியபடி, ''அதுவா, ஸ்டாலினை சீண்டியும், 23ம் புலிகேசி மாதிரி கார்ட்டூன் வரைஞ்சும், சிட்டி முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதைப்பார்த்து கொந்தளிச்ச உடன்பிறப்புகள், போஸ்டரை கிழிச்சிருக்காங்க,''

''இந்த பிரச்னையில், ஆளுங்கட்சிக்காரங்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கு. தி.மு.க.,காரங்க மேலே புகார் பதிவு செஞ்சிருக்கறதுனால, கொந்தளிப்புல இருக்காங்க,''

''தெற்கு தாசில்தார் அலுவலகத்துக்கு முன்னாடி, நாளைக்கு (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கப் போகுதாம்; உதயநிதி கலந்துக்கப் போறாராம்,''

''தி.மு.க.,காரங்க, செயல்பாடு எப்படி இருக்குன்னு தெரிஞ்சிருக்கறதுக்காக, ஆளுங்கட்சிக்காரங்க, சீண்டிப் பார்த்திருப்பாங்களோ,''

''இருக்கலாம், அஞ்சு மாவட்ட நிர்வாகிகளும் ஒண்ணா சேர்ந்து, ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க. கட்சி எழுச்சியோடு இருக்கான்னு இதுல இருந்து தெரிஞ்சிடும்,''

''இருந்தாலும், ஆளுங்கட்சிக்காரங்க தேர்தல் வியூகத்துக்கு முன்னாடி, இவுங்க பிளான், 'ஒர்க் அவுட்' ஆகுமான்னு தெரியலை,''

''மித்து, ஆளுங்கட்சின்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. தொண்டாமுத்துார் ஒன்றியத்தை கிழக்கு, மேற்குன்னு ஏற்கனவே இரண்டா பிரிச்சிருந்தாங்க. லோக்சபா தேர்தலில் அடி விழுந்ததால, கூடுதலா, மத்திய ஒன்றியம் உருவாக்கப் போறாங்களாம்,''

''அதிருக்கட்டும், ஓ.பி.எஸ்., பேனர் கிழிஞ்சு தொங்கிய விஷயத்தை மூடி மறைச்சிட்டாங்களாமே,'' என, பழசை கிளறினாள் மித்ரா.

''அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நீலாம்பூர் பைபாஸ் பக்கத்துல, ஆளுங்கட்சி தரப்புல, 106 அடி உயரத்துக்கு கொடிக்கம்பம் நட்டு, கட்சிக்கொடி பறக்க விட்டாங்களே,''

''விழா மேடையில் ஒரு பக்கம் - எம்.ஜி.ஆர்., - ஜெ., - இ.பி.எஸ்., ஆளுயர பிளக்ஸ், இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்., - எஸ்.பி.வி., பிளக்ஸ் வச்சிருந்தாங்க. இதுல, ஓ.பி.எஸ்., பேனரை மட்டும், 'யாரோ' பிளேடு போட்டுட்டாங்க. ஒரு நாள் முழுக்க கிழிஞ்சு தொங்குச்சு,''

''கட்சிக்குள்ள மறுபடியும் புகைச்சல் வரும்னு எதிர்பார்த்தாங்க. அப்படி எதுவும் நடக்காம தவிர்த்திட்டாங்க. இப்ப, மத்த பிளக்ஸ் பேனர்களையும் கழட்டிட்டாங்க,'' என்றபடி, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு போகணும், நீயும் வர்றீயா என, கேட்டபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

பின் இருக்கையில் அமர்ந்து கொண்ட மித்ரா, ''அக்கா, காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்டுல, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், பஸ்களை ஒழுங்கா வழி நடத்துறதில்லையாம்; 'டைமிங்' கடைபிடிக்காம, தனியார் பஸ்கள் இஷ்டத்துக்கு இயக்கப்படுதாம்; வசூலை அள்ளுறாங்களாம். அதிகாரிகளுக்கும் கமிஷன் போகுதோன்னு, ஊழியர்கள் மத்தியில் சந்தேகப்படுறாங்க,''

''அப்படியும் இருக்கலாம்,'' என்ற சித்ரா, பாலசுந்தரம் ரோடு வழியாக ஸ்கூட்டரை ஓட்டினாள்.

வடக்கு தாசில்தார் ஆபீசை பார்த்த மித்ரா, ''லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்துனதுனால, மிரண்டு போயிருக்கிற அதிகாரிகள், தீபாவளி வரைக்கும் புரோக்கர்கள் யாரும் ஆபீசுக்குள் வரக்கூடாதுன்னு, 'தடா' போட்டிருக்காங்க,''

''வருமானம் இழந்த புரோக்கர்களில் சிலர், அங்கிருக்கற ஒரு உயரதிகாரியை சந்திச்சு புலம்பியிருக்காங்க. ஏகப்பட்ட பேரிடம் விண்ணப்பம் வாங்கியிருக்கோம்; நீங்க மனசு வச்சா செய்யலாம்னு மன்றாடியிருக்காங்க,''

''அதுக்கு, ஆபீசுக்கு வர வேண்டாம்; நைட் நேரத்துல நான் போற இடத்தைச் சொல்றேன்; அங்க வந்து, சந்திச்சிட்டு போங்கன்னு சொல்லியிருக்காராம். அதனால, தீபாவளிக்குள்ள கல்லா கட்டிலாம்னு, புரோக்கர்கள் குஷியில் இருக்காங்களாம்,''

''அடப்பாவிகளா, திருந்தவே மாட்டாங்களா,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.

''அக்கா, ருசி பார்த்த பூனை, சும்மா இருக்குமா? அதுமாதிரிதான்! எனக்கொரு விஷயம் தெரியும், சொல்றேன், கேளுங்க!

''சிறு குறு விவசாயிகளுக்கு சான்று கொடுக்கறதுக்காக, சிறப்பு முகாம் நடத்தச் சொல்லி, அரசாங்கம், ஆர்டர் போட்டிருக்கு. வழக்கமா, இந்தச் சான்று கொடுக்குறதுக்கு, 8,000 ரூபாய் வரைக்கும் சிலர் லஞ்சம் வாங்குவாங்களாம்,''

''ருசி கண்ட வி.ஏ.ஓ.,க்கள், சும்மா கொடுப்பாங்களா. சமீபத்தில் நடந்த முகாமுக்கு வந்த விவசாயிகளிடம், ஏதாச்சும் ஒரு காரணத்தை கூறி, தனியா வரச்சொல்லி இருக்காங்களாம். இதுக்கு தீர்வே கிடைக்காதான்னு, விவசாயிகள் புலம்பிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிப் போயிருக்காங்க,

''மகளிர் பாலிடெக்னிக் சிக்னல் சந்திப்பில் இடது புறம் திரும்பிய சித்ரா, ''மித்து, மாநகராட்சி அலுவலகங்களை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கண்காணிச்சிட்டு இருக்காங்களாமே,'' என, கிளறினாள்.

''ஆமா, அப்படிதான் சொல்றாங்க. ஆனா, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, ரொம்ப தெளிவா இருக்காங்க. லஞ்சத்தை பணமா, நேரடியா வாங்குறதில்லையாம். துண்டுச்சீட்டு கொடுப்பாங்களாம்,''

''விசுவாசமான உதவியாளர் ஒருத்தரு, ஆபீசுக்கு வெளியே, ரோட்டுக்கு வருவாராம். அங்க, கை மாறுமாம். பணத்தை வாங்கியதும், ஆபீசர் வீட்டுக்கு போயி, கொடுத்திட்டு, வருவாங்களாம். இதுக்காகவே, ஒவ்வொரு ஆபீசரும், இரண்டு, மூன்று உதவியாளர்களை வச்சிருக்காங்களாம்,''

''உதவியாளர்களை, லஞ்ச ஒழிப்பு துறையினர், 'பாலோ' செஞ்சாங்கன்னா, லஞ்சம் வாங்குற அதிகாரிகளை, குடும்பத்தோடு கைது செய்யலாம்னு, நேர்மையான அலுவலர்கள் சொல்றாங்க,''

''லஞ்சம் வாங்குறதுக்கு, எப்படியெல்லாம், 'டெக்னிக்' யூஸ் பண்றாங்க. இந்த மூளையை, நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தலாம்ல,'' என, புலம்பியபடி, காந்திபுரத்தில், ஓட்டல் முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

வெளியூரில் இருந்து வந்திருந்த, கல்லுாரி தோழியை வரவேற்று, ஓட்டலுக்குள் நுழைந்து, சாம்பார் வடை, காபி ஆர்டர் கொடுத்தனர்.

சாம்பாருக்குள் வடையை துண்டு துண்டாக்கிய மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன் வணிக வளாகத்துல கடை நடத்துறவங்க, வாடகை கொடுக்காமல், 'டிமிக்கி' கொடுத்திட்டு இருக்காங்களாமே,'' என, நோண்டினாள்.

''ஆமாப்பா, கோடிக்கணக்குல நிலுவை இருக்குதாம். வரி வசூலருக்கும், மண்டல அதிகாரிக்கும், 'கப்பம்' கட்டிட்டு, கார்ப்பரேஷனுக்கு வரி செலுத்தாம ஏமாத்திட்டு இருக்காங்களாம்,

''சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு, காபியை உறிஞ்சிய சித்ரா, ''மித்து, 'மாஜி' கமிஷனர், வீட்டை காலி செஞ்சபோது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துட்டு போனதா சொன்னாங்களே, உண்மையா,'' என, கேட்டாள்.

''அக்கா, இந்த விஷயத்தை ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமான ஆதரவாளர்களே, பரப்பி விட்டிருக்காங்க. பழைய அதிகாரி, வீட்டை காலி செஞ்சது, அக்., 8ம் தேதி. மறுநாள் காலையில், மாநகராட்சி உயரதிகாரிகள், குடியிருப்புக்குள் சென்று, சுத்திப்பார்த்திருக்காங்க. ஆனா, 21ம் தேதியே, பொருட்களை காணலைன்னு பரப்பி விட்டாங்க. இதுல, ஏதோ, உள்குத்து இருக்குன்னு தெரிஞ்சது,''

''அதுக்கப்புறம் விசாரிச்சேன். பழைய கமிஷனரை, முதலில், வேளாண் துறைக்கு மாத்தியிருந்தாங்க. வேறு பணியிடம் கேட்டு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு துாது விட்டிருக்காரு. மனமிறங்கிய வி.ஐ.பி., தனது துறையில் ஒத்துவராம இருந்த அதிகாரியை துாக்கிட்டு, இவரை நியமிச்சிருக்காரு,''

''அதெல்லாம் இருக்கட்டும், அரசாங்க குடியிருப்புல இருந்து பொருட்களை எடுத்துட்டு போனாரா, இல்லையான்னு சொல்லலையே,''

''ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு விதமா பதில் சொல்றாங்க. சில பொருட்களை, உள்ளூர் அதிகாரிகளே எடுத்துக்கிட்டதாவும் சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.சாப்பிட்டு விட்டு, ஓட்டலில் இருந்து மூவரும் வெளியே வந்தனர். தோழியை, ஆட்டோவில் வீட்டுக்கு வழியனுப்பி விட்டு, இருவரும் புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X