கோவை: கோவையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்தும், இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், 23ம் புலிகேசி போன்று சித்தரித்தும் கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வினர் போஸ்டர்களை கிழித்தனர். இதனால் தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும், ஸ்டாலினை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்தும், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்கட்சியின் இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 300 பெண்கள் உட்பட 1,500 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநில இளைஞரணி செயலர் உதயநிதி பேசியதாவது: அமைச்சர் வேலுமணியை கண்டித்து ஆர்ப்பாட்டம் எனக்கூறி வந்தோம். இது போராட்டமாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளாக வேலுமணி அடிக்காத கொள்ளை இல்லை. அவர் வேலுமணி இல்லை. பிளாக்மணி. வரும் தேர்தலில், அவருக்கு மக்கள் நல்ல விலை கொடுக்க தயாராகிவிட்டனர்.

கீழ்த்தரமான அரசியல் செய்து, அநாகரீகமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். பெயரை போடாமல் போஸ்டர் அடித்தது சட்டப்படி தவறு. பெயரை போட்டு அச்சடிக்க தைரியமில்லை. நீங்கள் எல்லாம் அமைச்சர். இதைவிட அசிங்கமாக , சிறப்பாக போஸ்டர் ஒட்டுவதற்கு எங்களுக்கு தெரியும். எங்களிடமும் போஸ்டர் தயாராக உள்ளது. நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்ட தயாராக உள்ளோம்.
தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு விட்டு கொடுத்து வருகிறது. கொரோனாவை விட மாட்டோம் எனக்கூறினார்கள். ஆனால், தமிழகத்தில் கொரோனாவை விட மோசமான ஆட்சி நடக்கிறது. பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது.6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடியும், வேலுமணியும் கம்பி எண்ணப்போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE