புதுடில்லி: ஹத்ராஸ் பலாத்கார வழக்கை கண்காணிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உ.பி., மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி.,யில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை கண்காணிக்க வேண்டும், விசாரணையை உ.பி.,யில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தலைமை நீதிபதி பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஹத்ராஸ் பாலியல் வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த வழக்கை டில்லி மாற்றுவது குறித்து கவனிக்கப்பட வேண்டியது என்றாலும், இது குறித்து சி.பி.ஐ., விசாரணை முடிந்த பின்னர் முடிவு செய்யலாம்.

இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE