புதுடில்லி: கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீதான சீனாவின் தாக்குதல் சம்பவம் அமெரிக்காவிற்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது என 2+2 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அமைச்சர்கள் தெரிவித்தனர். இரு நாட்டு ராணுவ உறவும் வலுத்துள்ளதாக இரு நாட்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் 2+2 மாநாடு, 2018ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் மாநாடு, டில்லியில் இன்று (அக்.,27) நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் பங்கேற்றனர். இந்திய தரப்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர். அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த மாநாட்டில் இந்தியா- அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் பாதுகாப்பு படைகளுக்கான நவீன தொழில்நுட்பங்கள், வரைபடங்களை இருநாடும் பகிர்ந்துகொள்ள முடியும். எதிரி நிலைகளை துல்லியமாக கண்டறிந்து ஏவுகணைகள், டுரோன் விமானங்களால் தாக்க முடியும். மேலும் சைபர் விவகாரம் உட்பட பல வழிகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‛இந்தோ - பசிபிக் பிராந்தியமே எங்கள் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெற்றது. இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம்,' என்றார்.
ராஜ்நாத் சிங் கூறுகையில், ‛டில்லியில் 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நமது ராணுவம் மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. இந்த கூட்டத்தில், நமது அண்டை மற்றும் அதற்கு அப்பால் உள்ள மூன்றாம் நாடுகளில் சாத்தியமான திறன் மேம்பாடு மற்றும் பிற கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் ஆராய்ந்தோம்,' என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ கூறியதாவது: இந்திய - அமெரிக்க உறவு, நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் அமெரிக்காவிற்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. தங்கள் இறையாண்மை, சுதந்திரத்திற்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது அமெரிக்கா இந்தியாவுடன் துணைநிற்கும். கடந்தாண்டு, இணைய பிரச்னைகள் தொடர்பான எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளோம். எங்கள் கடற்படைகள் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் எஸ்பர் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவத்தொடர்பை பலப்படுத்த ஆலோசித்தோம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. உலகம் ஒரு உலகளாவிய தொற்றுநோய் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதால், பிராந்திய மற்றும் உலகின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த இந்தியா - அமெரிக்க நாடுகளின் கூட்டு முன்னெப்போதையும் விட முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE