புதுடில்லி: சிறு கடன் பெறுவோர் தங்கள் நேர்மையிலும், உண்மையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என நிரூபித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்து பேசியதாவது: முன்பெல்லாம், மாத சம்பளம் பெறுபவர்கள் கூட கடனுக்காக வங்கிகளை அணுக முடியாத நிலை இருந்தது. ஏழை மக்களும், சாலையோர வியாபாரிகளும் வங்கிகளை அணுகுவதை எண்ணிக்கூட பார்க்க முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது மக்கள் தங்கள் தொழிலை தொடங்குவதற்கு கடன் வழங்க அவர்களது வீடு தேடி வங்கிகள் வருகின்றன.தன்னிறைவு இந்தியா திட்டத்திற்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தநாள் சாலையோர வியாபாரிகளை பெருமைப்படுத்தும் நாள்.
தன்னிறைவு இந்தியாவை நோக்கிய அவர்களின் பங்களிப்பை நாடு அங்கீகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவிய நிலையில், தொழிலாளர்கள் எவ்வாறு இதை சமாளிப்பார்கள் என மற்ற நாடுகள் கவலைப்பட்டன. ஆனால், எந்த சாவலையும் வெற்றி பெற முடியும் என நமது தொழிலாளர்கள் நிரூபித்தனர். கொரோனா தொற்று காலத்தில், ஏழை மக்களின் பாதிப்பை குறைக்கும் வகையில் கரீப் கல்யாண் யோஜனா எனும் திட்டத்தை அரசு துவங்கியது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஆகும். ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டமும் ஏழைகளை கவனத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டது.

சாலையோர வியாபாரிகள், தங்கள் தொழிலை மீண்டும் துவங்கி தன்னிறைவு பெற முடியும் என்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் இந்த திட்டம் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க தேவையில்லை. கடன் பெற விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக பொது சேவை மையம் அல்லது நகராட்சி அலுவலகம் அல்லது வங்கிக்கு சென்று விண்ணப்பத்தை பதிவேற்றலாம்.
சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக சாலையோர வியாபாரிகள் உத்தரவாதம், பிணை இன்றி கடன் பெற்று வருகின்றனர். கடன் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளில் பெரும்பாலானோர் சரியான நேரத்தில் தங்கள் கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர். சிறு கடன் பெறுவோர் தங்கள் நேர்மையிலும், உண்மையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என நிரூபித்துள்ளனர். உரிய நேரத்தில் முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வட்டி தள்ளுபடி உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு ரூ.100 வீதம் பணப்பயன் வசதியும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனையின் பயன்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கிய மோடி, பணப்பயன்களை எவ்வாறு திரும்பப்பெறுவதுபற்றியும் விளக்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE