எல்லை பாதுகாப்பு : அமெரிக்க அமைச்சர்கள் உறுதி| Dinamalar

எல்லை பாதுகாப்பு : அமெரிக்க அமைச்சர்கள் உறுதி

Updated : அக் 28, 2020 | Added : அக் 27, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி : இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் சந்திப்பு, டில்லியில் நேற்று நடந்தது. இந்த சந்திப்புக்கு பின் பேசிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ''எல்லையை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் இந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம்,'' என, உறுதி அளித்தார். இது, சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாக
எல்லை,  இந்தியா,துணை ,அமெரிக்க அமைச்சர்கள் , ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அஜித் தோவல், மைக் போம்பியா,  மார்க் எஸ்பர்

புதுடில்லி : இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் சந்திப்பு, டில்லியில் நேற்று நடந்தது. இந்த சந்திப்புக்கு பின் பேசிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ''எல்லையை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் இந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம்,'' என, உறுதி அளித்தார். இது, சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. கிழக்கு லடாக்கில், எல்லையில் இரு நாட்டுப் படைகளும், கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ளன.பல சுற்று பேச்சு நடத்தியும், படைகளை விலக்குவதில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.இதற்கிடையே, தென் சீனக் கடல் பகுதி மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுடன், சீனா ஆக்கிரமிப்பு மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது.
குற்றச்சாட்டுஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே, வர்த்தகப் போர் நடந்து வருகிறது. 'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இந்த சர்வதேச அரசியல் சூழ்நிலையில், இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள இடையேயான மூன்றாவது மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர், இந்திய தரப்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பி.இ.சி.ஏ., எனப்படும் அடிப்படை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட, ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தத்தின்படி, உயர்நிலை ராணுவ தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, இனி இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ உறவில், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியம் உட்பட, பல பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மரியாதைநிருபர்கள் சந்திப்பின்போது, மைக் போம்பியோ கூறியதாவது:கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில். சீன ராணுவத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கையால், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த தீரமிக்க வீரர்களை போற்றும் வகையில், தேசிய போர் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினோம்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இதுபோன்ற சவால்கள் மற்றும் ஆபத்துகளை இணைந்து எதிர்கொள்வது என, இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. கிழக்கு லடாக் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன், சீனா செயல்பட்டு வருகிறது.

நாட்டின் எல்லையை, இறையாண்மையை, சுதந்திரத்தை பாதுகாக்கும் இந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதுடன், இது போன்ற சவால்களையும் இணைந்து எதிர்கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தொடர்ந்து வளர்ச்சிஅமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியம் அனைவருக்கும் சொந்தமானது; இதை உறுதி செய்வதற்கு, இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்போம்.ராணுவத் துறையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள நிலவரம் குறித்தும் பேச்சு நடத்தினோம். எல்லை கடந்த பயங்கரவாதத்தை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


இலங்கைக்கு பயணம்இந்திய பயணத்தை முடித்து, மைக் போம்பியா, இலங்கைக்கு சென்றுள்ளார்.சர்வதேச அளவில் அதிகாரம் படைத்த நாடாக உருமாறுவதற்கு, சீனா முயன்று வருகிறது. அதை முறியடிக்கும் வகையிலும், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கும் வகையிலும், போம்பியோவின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.இலங்கையில் மிகப் பெரிய முதலீட்டுடன் பல திட்டப் பணிகளை, சீனா மேற்கொண்டு வருகிறது. இலங்கையை, தன் கடன் வலையில் சிக்க வைக்கவே, சீனா இந்த உதவிகளை செய்வதாக, பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையைத் தொடர்ந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கும், போம்பியோ பயணம் மேற்கொள்ள உள்ளார்.


மோடியுடன் சந்திப்புஇரண்டு நாள் பயணமாக வந்துள்ள, மைக் போம்பியோ மற்றும் மார்க் எஸ்பர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் கென் ஜஸ்டர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, அஜித் தோவலை தனியாக சந்தித்து, அமெரிக்க அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.


'சிண்டு முடிய வேண்டாம்'மைக் போம்பியோவின் இந்தியப் பயணம் குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் கூறியதாவது: இந்தியா உட்பட, தெற்காசிய நாடுகள் பலவற்றுக்கும், மைக் போம்பியோ பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சீனாவுக்கு எதிராக கருத்து கூறுவது புதிதல்ல. வழக்கம்போல், அடிப்படை ஆதாரமில்லாத பொய்களை அவர் கூறி வருகிறார்.சீனா மற்றும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே, சிண்டு முடியும் வேலையை செய்ய வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.


சாத்தியமாகும்!இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே நம் விருப்பம், நோக்கம். சர்வதேச விதிகளை அனைத்து நாடுகளும் பின்பற்றினால் மட்டுமே இது சாத்தியமாம்.ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,


விதிகளை மதிப்போம்!இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்தோம். இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அமைதியும், ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் ஏற்படுவதை உறுதி செய்வோம். சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே, அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும். ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X