புதுடில்லி: 'கடன் ஒத்திவைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்தில் வசூலிக்கப்பட்ட வட்டி மீதான வட்டி, நவ., 5க்குள், கடன் வாங்கியோருக்கு திரும்ப செலுத்தப்படும்' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை குறைக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

ஒத்தி வைக்க வாய்ப்பு
வங்கிகளில் வாங்கி உள்ள கடனுக்கான, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணை செலுத்துவதை ஒத்தி வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, ஆறு மாதங்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டது.ஏற்கனவே வட்டி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கடன் ஒத்திவைப்பு காலத்தில், வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டதை எதிர்த்து, பல்வேறு வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
வழக்கின் விசாரணையின் போது, '2 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மீது விதிக்கப்பட்ட கூட்டு வட்டி ரத்து செய்யப்படும்.'இதனால், வங்கிகளுக்கு ஏற்படும், 6,500 கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசே ஏற்கும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.'கடன் ஒத்திவைப்பு திட்டத்தை பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், வசூலிக்கப்பட்ட கூட்டு வட்டி, நுகர்வோர் கணக்கில் செலுத்தப்படும்' என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடையே உள்ள வித்தியாச தொகையை, நவ., 5ம் தேதிக்குள் வாடிக்கையாளருக்குத் திருப்பி அளிக்கும்படி, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திருப்பி செலுத்திய தொகையை, மத்திய அரசிடம் இருந்து வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து, இது தொடர்பான உத்தரவை, ரிசர்வ் வங்கியும் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE