புதுடில்லி: அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் பத்திரத்துக்கு தடை கோரிய
மனு மீது, உடனடியாக விசாரணை நடத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பெரிய
நிறுவனங்கள், தொழிலதிபர்களிடம், அரசியல் கட்சிகள் நன்கொடை திரட்டுகின்றன.
இதில், ரொக்கப் புழக்கத்தை குறைத்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும்
நோக்கில், மத்திய அரசு, 2018 ஜனவரியில், தேர்தல் பத்திர வெளியீட்டு
திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நன்கொடை தருவோர், வங்கியில் தேர்தல்
பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இத்திட்டத்தில்,
நன்கொடை அளிப்பவரின் பெயர் வெளியிடப்படுவதில்லை.
அதே
சமயம், எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வந்தது என்ற விபரத்தை, தெளிவாக பெற
முடியும். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு சார்பில், தேர்தல்
பத்திர திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரம்
தொடர்பாக, மத்திய அரசும், தலைமை தேர்தல் ஆணையமும் இரு வாரங்களில் பதில்
அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

அதன்பின், இந்த வழக்கு விசாரணை நடக்கவில்லை.இந்நிலையில், ஜனநாயக
சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள புதிய மனுவில் கூறியிருப்பதாவது:பீஹார் சட்டசபை தேர்தல்
அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் பத்திரங்களை வழங்க வும், பத்திரங்களை பெற்று
பணம் வழங்கவும், ஸ்டேட் வங்கிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்
பத்திர திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, நாங்கள் தாக்கல் செய்த மனு
மீது, ஜன., 20க்கு பின், விசாரணை நடத்தப்படவில்லை. அதனால், அந்த மனு
தொடர்பாக, உடனடியாக விசாரணை நடத்தி, தேர்தல் பத்திர திட்டத்துக்கு தடை
விதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE