புதுடில்லி: மனிதகுல மேம்பாட்டுக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை செய்து வரும் சமூகப் பணிகளுக்கு, ஐ.நா.,வின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் வெளியிட்டுள்ள, 'வீடியோ' செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள பிரசாந்தி நிலையம், பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 'கேஷ் கவுன்டர்' இல்லாத பிரமாண்ட மருத்துவமனையில், ஏழைகளுக்கு இலவசமாக, தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அனைவருக்கும் துாய்மையான குடிநீர் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நல்ல குணங்கள், கருத்துகளை கற்கும் வகையில், இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் மனிதநேய செயல்பாடுகள், உலகெங்கும் ஏற்கனவே பிரசித்தி பெற்றன.
இந்நிலையில், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும், ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு, சர்வதேச அளவிலான, சிறப்பு ஆலோசனை அங்கீகாரம் அளிக்கும்படி, ஐ.நா., பொருளாதார கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், அறக்கட்டளையின் செயல்பாடுகளை, உலகம் முழுதும் பின்பற்றக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE