
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மக்களிடம் ரேடியோ மூலமாக பேசிவருகிறார்
‛மனதின் குரல்' என்ற மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தூத்துக்குடி மில்லர்புரத்தில் முடிதிருத்தும் கடையில் நுாலகம் வைத்து நடத்தும் பொன்.மாரியப்பனுடன் பேசினார், நுாலகப்பணிக்கு தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானதை அடுத்து பொன்.மாரியப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது பல பிரபலங்கள் போன் மூலம் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.தினமலர் சார்பில் நாம் நமது பாராட்டை தெரிவித்ததுடன், நீங்கள் பிரதமரின் கவனத்தை பெற்றது எப்படி?என்று பேட்டியை போனிலேயே துவங்கினோம்.
அவரோ அடுத்த கேள்வியை நாம் கேட்பதற்கு வாய்ப்பு தராமல் முழுமையாக நடந்த நிகழ்வைப்பற்றி விவரித்தார்.
பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருவது எல்லாம் துாத்துக்குடிதான்.எட்டாவது வரை படித்தேன் அதற்கு பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை.தாத்தா வைத்திருந்த சலுான் கடைக்கு போய் தொழிலை கற்றுக் கொண்டேன்,ஆனாலும் வேறு வேலை செய்வோம் என முடிவு எடுத்து பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தேன், திருப்தி வரவில்லை சொந்தத் தொழிலையே துவங்குவது என இங்கே கடை வைத்து நடத்திவருகிறேன்.

எனது கடை சின்னக்கடைதான் இரண்டு பேர் உட்கார்ந்து முடிவெட்டலாம் ஆனால் கடையில் நான் மட்டுமே இருக்கிறேன். நானே முதலாளி நானே தொழிலாளி.எனக்கு சிறு வயது முதலே வாசிக்கும் பழக்கம் உண்டு.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சிறுகதைகள், வரலாறு போன்றவைகளை தேடி தேடி படித்துக் கொண்டிருந்தேன்.
படித்த புத்தகங்களை கொண்டு வந்து சலுானில் போட்டேன் வந்தவர்கள் ஆர்வமாக படித்ததைப் பார்த்ததும் எனக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது.ஐந்து பத்து ஐம்பது நுாறு என்று அதிகரித்துக் கொண்டே போய் இப்போது எனது சலுானில் ஆயிரத்து ஐநுாறு புத்தகங்கள் உள்ளன.
வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிடித்த சிறுவர் கதை புத்தகங்கள் நிறைய வாங்கிப் போட்டேன், அந்த புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம் எழுதச் சொல்வேன் சிறந்த விமர்சனத்திற்கு புத்தகங்களை பரிசாக கொடுப்பேன் இந்த விஷயம் நிறைய மாணவர்களுக்கு பரவி புத்தகங்களை பரிசாகப் பெறுவதற்காகவே இங்கு வந்து புத்தகங்களை படித்து அது பற்றி எழுத ஆரம்பித்தனர்.

புத்தகங்களை இரவலாக கொடுத்தால் திரும்பி வருவதில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் இங்கே உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை இதன் காரணமாக பலர் புத்தகங்களில் தாங்கள் படித்த பக்கங்களை குறித்து வைத்துவிட்டுச் சென்று மீண்டும் மீண்டும் வந்து படித்து முடிப்பர்.
இந்த நிலையில்தான் கடந்த வாரத்தில் ஒரு நாள் துாத்துக்குடி வானெலி நிலையத்தில் இருந்து என்னை அழைத்தார்கள்.
ஏதாவது புத்தகம் தருவார்கள் போல என்று எண்ணி பையோடு போயிருந்தேன் ஆனால் அவர்களோ முடிதிருத்தும் இடத்தில் நுாலகம் நடத்தும் உங்கள் செயலை பாராட்டி பிரதமர் பேசப்போகிறார் தயராக இருங்கள் என்றனர்.
எனக்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை ஒரு இரண்டு மணி நேரம் ஒரே டென்ஷனாக இருந்தது டில்லியில் இருந்து வந்திருந்த ஒரு தமிழ்-இந்தி தெரிந்த ஒரு அதிகாரி என்னுடன் இருந்தார்.
பிரதமர் இந்தியில் பேசுவார் நான் அதை உங்களுக்கு தமிழில் மொழிபெயர்க்கிறேன் நீங்கள் தமிழிலையே பேசுங்கள் நான் அதை இந்தியில் பிரதமருக்கு மொழிபெயர்ப்பேன் என்றார்
ஆனால் அவர் சொன்னதற்கு நேர்மாறான விஷயம் நடந்தது. பிரதமர் லைனில் வந்தார்,‛ என்ன மாரியப்பன் நல்லா இருக்கீங்களா?' என்று தமிழிலேயே பேசினார் எனக்கு சந்தோஷம் தாளவில்லை மிகவும் நன்றாக இருக்கிறேன் பிரதமரிடம் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்றேன் நான் பேசியதை இந்தியில் பிரதமருக்கு மொழி பெயர்க்கப்பட்டது அதன்பிறகு எனக்கு நுாலகம் நடத்தும் ஆர்வம் எப்படி வந்தது என்ன புத்தகம் மிகவும் பிடிக்கும் என்றெல்லாம் கேட்டு பாராட்டினார் நான் திருக்குறள் பிடிக்கும் என்று சொன்னதும் பிரதமரே திருக்குறள் பற்றி சில நிமிடம் பெருமையாக பேசினார் .
சில நிமிடங்கள் நீடித்த எங்கள் உரையாடல் எனது நன்றி கூறுதலுடன் முடிந்தாலும் அந்த தருணம் தந்த மகிழ்ச்சி இன்னும் முடியவில்லை நீடித்துக் கொண்டே இருக்கிறது.வியாழக்கிழமை ரிக்கார்டிங் செய்யப்பட்ட இந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பப்பட்டது அப்போது முதல் இப்போது வரை நிறைய பேர் நேரிலும் போனிலும் பாராட்டிக் கொண்டே இருக்கின்றனர்.
பிரதமரின் பாராட்டும் பொதுமக்களின் வாழ்த்தும் எனக்கு இன்னும் உத்வேகத்தை தந்துள்ளது மாணவர்களுக்கு இடையே வாசிப்பு பழக்கத்தை என்னால் முடிந்த அளவு மேலும் வளர்த்தெடுப்பேன் என்று கூறி முடித்த பொன்.மாரியப்பனிடம் நீங்களும் பேசலாம்,எண்:95971 56246.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE