திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரியிருந்த சிவசங்கரின் மனுக்களை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சிவசங்கரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கும், கேரள மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலராகவும் இருந்த சிவசங்கருக்கும், தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவசங்கர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சிவசங்கரிடம் என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் கைது செய்யப்படுவதற்கான முகாந்திரம் இருப்பதாக, தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில், சிவசங்கர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, 'சிவசங்கரை, வரும், 23ம் தேதி வரை கைது செய்யக்கூடாது' என. உத்தரவிட்டார். சமீபத்தில் சிவசங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது முன்ஜாமின் மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், முன்ஜாமின் வழங்க மறுத்ததுடன், சிவசங்கரின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE