தர்பங்கா: நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் அவர்களின் நலன்களுக்காக மட்டும் உழைக்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீஹாரில் 2ம் கட்ட தேர்தலை முன்னிட்டு, தர்பங்கா மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கிவிட்டன. ராமர் கோவில் குறித்து எங்களிடம் கேள்வி கேட்டவர்கள் இன்று அமைதியாக உள்ளனர். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். கொரோனா காலத்திலும் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். நிதிஷ் ஆட்சி காலத்தில் மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது.
விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. மின்சாரம், தூய்மையான குடிநீரை வழங்கியுள்ளோம். ஏழைகளுக்கு ரூ.5 லட்சம் வரை சுகாதார பலன்களை அளித்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் பைப் மூலம் குடிநீர் கிடைக்க உள்ளது. அசுத்தமான குடிநீரால், குழந்தைகளை எந்த தாய்மார்களும் இழக்கக்கூடாது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற கடுமையாக உழைப்போம். தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். இதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை பெருக்க தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். பீஹாரை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற உழைத்து வருகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமார் ஆட்சியில் பீஹாரில், அதிவேகமாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள், தங்களை மட்டும் வளப்படுத்தி கொண்டனர். நாங்கள் உங்களுக்காக உழைக்கிறோம். எதிர்க்கட்சிகள் தங்களுக்காக உழைக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு கல்வி அறிவு அளிப்பதன் மூலம் நாடு முன்னேறும். இளைஞர்களுக்கு உதவ கல்வி நிலையங்கள் மேம்படுத்தப்படும். கிராமங்களில் குளிர்பதன வசதியுடன் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பீஹாரில் காட்டாட்சியை கொண்டு வந்தவர்களை தோற்கடிக்க மக்கள் உறுதியேற்றுள்ளனர். அவர்களின் ஆட்சியில் மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்பட்டது. பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதையே பீஹார் மாநிலத்தவர்கள் விரும்புகின்றனர். பிரிவினைவாதத்தை விரும்புபவர்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது. பீஹாரின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை சிலர் தவறாக பயன்படுத்த விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE