திருவனந்தபுரம் : தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, 'மாஜி' முதன்மைச் செயலர் சிவசங்கரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, அந்நாட்டிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, ஜூன் மாதம் ரகசிய தகவல் கிடைத்தது.
30 கிலோ தங்கம்
இதையடுத்து, ஜூலை 5ல், துாதரகத்துக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 30 கிலோ தங்கம் இருந்தது. இதன், சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய்.இந்தக் கடத்தல் தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலகத்தில் முன்பு பணியாற்றிய, சரித் குமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.சரித் குமாரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தில் முன்பு பணியாற்றியவரும், தற்போது, கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில், அதிகாரியாக பணியாற்றி வருபவருமான ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் நாயர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாசில் பரீத் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, ஸ்வப்னா உள்ளிட்ட 11 பேரை, என்.ஐ.ஏ., கைது செய்தது. இந்த வழக்கை, என்.ஐ.ஏ.,வுடன், அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகியவையும் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், ஸ்வப்னாவுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும், மாநில தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலரும், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலருமான சிவசங்கருக்கு, தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
சஸ்பெண்ட்
இந்தக் கடத்தலில் தங்களுக்கு கிடைக்கும் பங்கை பதுக்கி வைப்பதற்காக, ஸ்வப்னாவுக்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், 'லாக்கர்' வசதியை, சிவசங்கர் ஏற்பாடு செய்துள்ளது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதையடுத்து, இந்த வழக்கில், முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், முதல்வர் பினராஜி விஜயன் பதவி விலகக் கோரி, காங்கிரசும், பா.ஜ.,வும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டன. ஆனால், தங்க கடத்தல் சம்பவத்தில், முதல்வருக்கு எந்த தொடர்பும் இல்லை என, மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
ராஜினாமா
இதற்கிடையே, தங்க கடத்தல் வழக்கில் கைதாவதை தவிர்க்க, சிவசங்கர், முன் ஜாமின் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் மீண்டும் நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன. மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:
சிவசங்கரின் முன் ஜாமின் மனு, தள்ளுபடியாகிவிட்டது. அவரை, அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இனி, முதல்வர் பினராயி விஜயன், சிவசங்கருக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவதை கைவிட்டு, ராஜினாமா செய்ய வேண்டும். அது தான், முதல்வர் பதவிக்கு, அவர் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் கூறியதாவது:தங்க கடத்தலில், முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளது உறுதியாகிவிட்டது. சிவசங்கரிடம் நடத்தப்படும் விசாரணையில், முதல்வர் அலுவலகத்துக்கு உள்ள தொடர்புகள் தெளிவாக தெரியும்.
மற்றவர்கள் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டால், இடதுசாரிகள், வானத்துக்கும், பூமிக்கும் குதித்து, அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என, போராட்டங்களில் ஈடுபடுவர்.
கடும் நடவடிக்கை
ஆனால், இப்போது வாய்மூடி மவுனம் காக்கின்றனர். முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்வது, இடதுசாரி அரசுக்கு நல்லது.இவ்வாறு, அவர் கூறினார்.மாநில சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன் கூறியதாவது:தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, மாநில அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தில், என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்த வழக்கில், மாநில அரசு மீது, இதுவரை எந்த விசாரணை அமைப்பும் குற்றம் சாட்டவில்லை.இவ்வாறு, அவர் கூறினார். தங்க கடத்தல் விவகாரத்தில், தங்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை என, மாநில அரசு கூறினாலும், முதல்வருக்கு தொடர்பு உள்ளதாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. கேரள சட்டசபைக்கு, அடுத்த ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த விவகாரம், முதல்வர் பினராயி விஜயனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.
சிவசங்கர் கைது
சிவசங்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவரை கைது செய்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.கேரள உயர் நீதிமன்றத்தில், முன் ஜாமின் கோரி, சிவசங்கர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:என்னிடம் பல்வேறு விசாரணை அமைப்புகள், 90 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளன. இதில் எந்த அமைப்பும், என் மீது ஆதாரபூர்வமாக, எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.
ஆனால், என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றன. உடல் நலம் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை கைது செய்வதை தடுக்க, எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கேரள உயர் நீதிமன்றம், சிவசங்கரை கைது செய்ய, கடந்த, 23ம் தேதி வரை தடை விதித்தது. சிவசங்கருக்கு முன் ஜாமின் வழங்க, அமலாக்கத் துறை மற்றும் சுங்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், சிவசங்கரின் முன் ஜாமின் மனுவை, உயர் நீதிமன்றம் நேற்று காலை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். பின், விசாரணைக்காக, கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு, அவரை அழைத்துச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE