பெண்கள் பீனிக்ஸ் பறவைகள்

Added : அக் 29, 2020
Share
Advertisement
'பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள்' என்பது பிரெஞ்ச் தேசத்து மக்களால் நம்பப்படுகிற சித்தாந்தம். உண்மையில் பெண் குழந்தைகள் பிறந்தாலும், அவர்கள் இந்த சமுதாயத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. அப்படி பெண்கள் வளர்வதற்கு இந்தச் சமூகம் அனுமதிப்பதில்லை என்பது காலக்கொடுமை. கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தையைக் கொல்லும் அவலம், தமிழகத்தில் நேர்வதைக் கண்டு
 பெண்கள் பீனிக்ஸ் பறவைகள்

'பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள்' என்பது பிரெஞ்ச் தேசத்து மக்களால் நம்பப்படுகிற சித்தாந்தம். உண்மையில் பெண் குழந்தைகள் பிறந்தாலும், அவர்கள் இந்த சமுதாயத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை.

அப்படி பெண்கள் வளர்வதற்கு இந்தச் சமூகம் அனுமதிப்பதில்லை என்பது காலக்கொடுமை. கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தையைக் கொல்லும் அவலம், தமிழகத்தில் நேர்வதைக் கண்டு உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனது; அந்தநேரம் தான் தொட்டில் குழந்தைத் திட்டத்தைக் கொண்டு வந்தார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா. ஆயினும் பரவலாகவே உலகம் முழுவதிலும் பெண்குழந்தைகளுக்கு நேரிடும் அவலம் ஒன்றுதான். அது நெஞ்சில் நெருப்பள்ளிப் போடும் வேதனைக்குரியதாக இருக்கிறது.

ஒருவேளை அந்தப் பெண் குழந்தை வாழ்வதற்கான இருப்பை நோக்கி நகர்கையில், பருவ வயதை அடைந்து விட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைத்தெடுத்து விடுகிறது. தனியாகச் செல்ல முடியாத துயரம், நேரம் கடந்து வீட்டுக்கு வந்தால், அதற்கொரு கதை திரித்து விடும்.


நெருப்பாற்றில் நீந்தி

அக்கம் பக்கம் உள்ளோரின் கீழ்மை புத்தியால் நேரும் அவலம், ஓர் ஆணோடு சிரித்துப் பேசி விட்டாலோ, வதந்திகளைப் பரப்பி விடும் சமூகம் என நாள்தோறும் நெருப்பாற்றில் நீந்திக் கரையேறும் நிலைதான் பெண்களின் நிலை. திருமண வயதை அடைந்து, மணம் முடித்து முற்றிலும் புதிதான ஒரு குடும்பத்தோடும், அதுவரை அறிமுகம் இல்லாத புதிய ஓர் ஆணோடும் எங்கோ ஓர் ஊரில் வசிக்கின்ற அந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் அந்தப் பெண்ணின் கனத்த வாழ்வு.

முற்றிலும் புதிதாக ஒரு குடும்பத்தின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும், துன்பங்களையும், துயரங்களையும் தாங்கி அவள் வாழ்க்கையை நகர்த்துகிற விதம் பெண்ணின் பேராண்மையையும், சகிப்புத்தன்மையையும் காட்டுகிறது.கர்ப்பம் அடைந்து வளைகாப்புக்குப் பிறகு, தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்திருந்து, அதன் பின்னால் எப்போது இவள் புகுந்த வீட்டுக்குச் செல்வாளோ என்று பெற்றோரும், மற்றோரும் நினைக்கிற போதும், புகுந்த வீட்டில் இன்னும் சில காலம் இருந்து விட்டு வரலாமே? என்று இவர்கள் எண்ணுவதும், என அந்த இங்கும் அங்குமான அவர்களின் எண்ணங்களால் தன்னுள் நிகழும் போராட்டங்களில் சிக்கித் தவிக்கிறாள் ஒரு பெண்.


எண்ணற்ற துயரங்கள்

பருவவயதில் இருக்கின்ற ஒரு பெண், ஒருதலைக் காதலால் சிக்கித் தவித்து, காதலில் விழுந்து மணம் முடித்தபின் ஆணவ கொலைகளாலும், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், வரதட்சணை கொடுமைகளாலுமென பெண் படும் பெருந்துயரம், அவள் எதிர்கொள்ளும் கொடூரம் வார்த்தைகளில் வடித்திட முடியாது.இப்படி எண்ணற்ற துயரத்தைச் சந்திக்கிறாள். சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சம உரிமை இல்லாமை என இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை இந்தப் பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் ஒரு வேள்வித் தீயில் வெந்து எரிந்து கொண்டே இருக்கிறாள்.

21ம் நுாற்றாண்டில் நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டு நிற்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகமே அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்திலும் கூட, பெண்கள் ஆண்களுக்கு ஒரு படி கீழேதான் என்ற நிலைமை உலகெங்கும் உள்ளது.


ஆணாதிக்க சமூகம்

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் சுரண்டல்களால்தான் என்பதோடு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும், இரண்டாவது இடத்தில் வைத்துப் பார்க்கப்படுவதும் என்று இப்படி ஆணாதிக்க சமுதாயம் அவர்களை நசுக்குகிறது.

பெண்கள் எல்லாத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களை என்றுமே ஒரு போகப் பொருளாக, காமக் கண்ணோடு நோக்கும் ஆண்களே அதிகம். கவுரவக் கொலை எனப்படும் ஆணவக் கொலைகள் பெண்களுக்கு எதிரானதாகவே அதிகம் நடக்கிறது. உலக அளவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில்முதலிடத்தில் இருப்பது இந்தியாதான். அதைப்போல, பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படும் நாடுகளில், முதலிரண்டு இடத்தில் பிரேசில், இந்தியா உள்ளன.

பிரேசிலில் 87 சதவிகிதமும், இந்தியாவில் 73 சதவிகிதமும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர். தேசிய குற்ற ஆவணப் பதிவேடு ஆண்டறிக்கையின்படி, 2014ல் சுமார் 34,530 பாலியல் வன்கொடுமை வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்பை விட 7 சதவிகிதம் அதிகம். இதுபோன்ற சம்பவங்களில் 2020ல் எண்ணிக்கை கூடியிருக்கிறது. அந்த எண்ணிக்கை 20 சதவிகிதத்தைத் தொட்டு நிற்கிறது.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 90 சதவிகிதத்துக்கும் மேல், அந்தப் பெண்ணுக்கு அறிமுகமானவர்களே. இதில் 40 சதவிகிதம் பெண்கள் 19வயதுக்குக் குறைவான சிறுமிகள். தினமும் 800க்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமைகளாலும், மற்ற கொடுமைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.


பெண் சிசு அழிப்பு

இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமைசம்பவம் நடைபெற்று வருகிறது. பத்தாண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை, 2 கோடி. பெண் சிசுக்கொலைக்கு முக்கியக் காரணமாக இருப்பது இன்னொரு பெண்தான் என்கிறது அதிர்ச்சிகரமான ஆய்வு. பெண்களுக்கான வன்முறைகளும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளும் அதிகமாக நடக்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது ஆப்கானிஸ்தான்.

இங்கு 19 வயதில் இருந்தே பெண்கள் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில் 87 சதவிகிதப் பெண்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் ஹாங்கோ நாடு இருக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1,100 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பெண்களுக்கு எதிராக அதிக வன்கொடுமைகள் நடப்பது, அதாவது பாலியல் கொடுமைகள் உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்துதல், சம உரிமை இல்லாமை போன்றவற்றில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் மட்டுமே 87 சதவிகிதம் பெண்களுக்கு எதிராக பாலியல், உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமைகள் நடப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. கூட்டு பாலியல் கொடுமையும் இங்கு அதிகம்.


மீண்டும் மீண்டும்

உலகம் முழுவதும் பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும், பொதுவெளியிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும் சொல்லொண்ணா துயரை பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தினம் தினம் அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல இந்தப் பூமியில் வாழ்வதற்கு மீண்டும் மீண்டும் எரிந்து கொண்டிருக்கிறார்கள். அச்சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் பெண்கள் எரிகிற நெருப்பாய் தகிக்கிற போது, அவர்கள் படுகிற துயரத்தை இந்த ஆணாதிக்க சமுதாயம் எப்போது உணரப் போகிறது. ஒரு பெண் கருவறையில் ஜனிக்கும் தருணத்தில் இருந்து கல்லறையில் அவள் உறங்கும் தருணம் வரை அவளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்தான் எத்தனை எத்தனை?நாடு, இனம், மதம், மொழி, வயது, பொருளாதார நிலை என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து நிலைகளிலும் வன்கொடுமை ஏதோ ஒருவகையில் அரங்கேறிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத வேதனைகளில் ஒன்று.

'மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற கவிமணி தேசிய விநாயகம்பிள்ளையின் கவிதை வரிகள் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அரு மருந்தாகவே இருக்கின்றது. ஆனால், இந்த நம்பிக்கை வார்த்தை வாசித்து முடிவதற்குள்ளாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே ஆண்டில் 59 ஆயிரத்து 853 சம்பவங்களுடன் உத்தரபிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது.

அங்குள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மொத்த இந்தியாவையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. இதுபோன்ற பெண்களுக்கு எதிரான தொடர் குற்றச் சம்பவங்கள் நடந்தேறி வருவது அவமானத்துக்குரியது. ஆகவே பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

-முனைவர் வைகைச்செல்வன்

தமிழக முன்னாள் அமைச்சர்

mlamailid@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X