சென்னை: ''சென்னையில், 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டடுக்கு மேம்பாலச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: சென்னையில், துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலை பணிகள், அடுத்தாண்டு துவங்கும். இதை, 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டடுக்கு மேம்பாலமாக, துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, பயணியர் வாகனங்கள் பயன்பாட்டிற்கும், இந்த மேம்பாலம் உதவும்.

சென்னை - பெங்களூரு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு, தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேம்பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு, சிமென்ட், ஜல்லி, மணல் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான, ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்வதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, நிதின் கட்கரி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE