சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்திய வானிலை மையம் தரப்பில், தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று (அக்.,28) வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலையில் கனமழை கொட்டியது.
கனமழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், #chennairains ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.

மஞ்சள் அலர்ட்:
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இந்திய வானிலை மையம் 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னையில் இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைப்பொழிவு விவரங்கள்:
மயிலாப்பூரில் அதிகப்பட்சமாக 20 செ.மீ. மழை பொழிந்துள்ளது. பாலவாக்கத்தில் 14.8 செ.மீ., பாடியில் 12.4 செ.மீ., ஜார்ஜ் டவுனில் 11.2 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10.4 செ.மீ., கொரட்டூர், அண்ணாநகரில் தலா 10.1 செ.மீ., மீனம்பாக்கத்தில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE