தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சி கண்டுள்ள இந்தக் காலத்தில், இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது, சாத்தியமில்லாத கோரிக்கை அல்ல. மக்கள் விரோத முடிவுகள் என்றால், 'அதிரடியாக' அமல்படுத்தும், பா.ஜ., அரசு, இட ஒதுக்கீட்டு உரிமையை காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கூடியதே.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன்
'இட ஒதுக்கீடும் வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை, இளைஞர்களை படிக்க சொல்லுங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை.
தஞ்சை ராஜராஜனின், 1,035வது சதய விழாவில், தேவாரம், திருவாசகம் பாடி, தமிழில் வழிபாடு செய்துள்ளனர். பல ஆண்டுகளாகவே, தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது மகிழ்ச்சி; பாராட்டுக்கள். இதைப் பின்பற்றி தமிழகத்தின் பிற கோவில்களிலும், தமிழில் வழிபாடு நடக்க வேண்டும்.
-காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன்
'பெரும்பாலும் எல்லா கோவில்களிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதப்படுகின்றன. குதர்க்கவாதிகள் கேட்பது, தமிழ் வழிபாடு மட்டும்...' என, நினைவுபடுத்தும் வகையில், காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் அறிக்கை.
ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது. கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. கருத்து வேறுபாடுகள் இல்லை; கருத்து பரிமாற்றம் தான் நடக்கிறது.
- அமைச்சர் உதயகுமார்

'அப்படியா, அப்போ, சில வாரங்களுக்கு முன், முதல்வர் - துணை முதல்வர் இடையே நடந்தது என்ன...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி.
கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களின் முகத்தை, நெருங்கிய உறவினர்கள் பார்க்க பாதுகாப்பு விதிமுறைகளின்படி, அனுமதிக்கப்படுவர். இறந்தவர் உடலை மூடியுள்ள பையின் ஜிப்பை திறந்து, முகம் காண்பிக்கப்படும்.
- கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா
'கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து, கேரளா இன்னமும் மீளவில்லை போலும்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், கேரள சுகாதாரத் துறை அமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைலஜா அறிக்கை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அது தவறு. அவருக்கு, எல்லாரையும் போல, இரண்டு கண்கள் இருந்தாலும், இரண்டு பார்வை பார்க்கின்றன. அதனால் தான், இங்கு இரட்டை ஆட்சி நடப்பதாக கூறியுள்ளார்.
- அமைச்சர் மணியன்
'அப்படியும் இருக்குமோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் மணியன் பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE