மதுரை: மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல முடிவு தெரிய வரும் என நம்புவதாக என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவபடிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி, மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கூறியதாவது: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவில், கவர்னர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி , நீதிமன்றத்திற்கு கவர்னர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், விரைவாக முடிவெடுக்க வேண்டும். சூழல், அவசியம், அவசரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகே, சட்டசபையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கூடுதலாக பல கோணங்களில் ஆலோசிக்க கவர்னருக்கு மேலும் அவகாசம் தேவையா?
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கூடுதல் அவகாசம் கேட்பது விசித்தரமாக உள்ளது. இதுபோன்ற சூழல்கள் எழாது என்பதாலேயே, கவர்னருக்கு உத்தரவிட முடியாது என சட்டத்தில் உள்ளது.
கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனினும், மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். எனக்கூறிய நீதிபதிகள், கர்நாடகாவில், இது போல அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? பிற மாநிலங்களில் என்ன நிலை என்பது குறித்து மதியம் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில், கர்நாடகாவில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
நம்பிக்கை
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், உள்ஒதுக்கீடு மசோதா மீது திங்கட்கிழமை நல்ல முடிவு தெரிய வரும் என நம்புகிறோம். 300 முதல் 400 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் நோக்கம். அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க தேவையில்லை என விதிகள் உள்ளன. விதி 361ன்படி கவர்னர், எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE