சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தகுந்த நேரத்தில், அரசியல் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில், வெற்றிடம் ஏற்பட்டுள்ளது' எனக்கூறிய ரஜினி, 2017 இறுதியில், அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து தன் ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, உலகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்திய அவர், தேர்தலுக்காக பகுதி வாரியாக, பூத் ஏஜென்ட்களையும் நியமித்தார். இந்நிலையில், நேற்று ரஜினி எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை மறுத்து டுவிட்டரில் ரஜினி வெளியிட்ட பதிவு: என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவி கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE