சென்னை: நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஷ்டேகை டிரண்டாக்கி ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசிலுக்கு வரவேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக ரசிகர்கள் தவம்கிடக்க, ரஜினியோ அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக கூறாமல் காலம் தாழ்த்தி வந்தார். பல வருடங்களுக்கு பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாகவும், தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் கடந்த 2017ம் ஆண்டு திட்டவட்டமாக கூறினார். ஆனால், எப்போது, எப்படி என்பதை தெளிவுப்படுத்தாமல் மீண்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். ரசிகர்களோ பல வருட ஏக்கத்திற்கு இப்போதாவது அரசியல் வருவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதாக ஆறுதல்படுத்திக்கொண்டனர்.

அரசியலுக்கு வருவது குறித்து முன்னோட்டமாக தன் ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றி, உலகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்திய அவர், தேர்தலுக்காக பகுதி வாரியாக, பூத் ஏஜென்ட்களையும் நியமித்தார். கட்சி தொடக்கவிழா மாநாட்டை மதுரையில் வைப்பார், திருச்சியில் வைப்பார் என அவ்வபோது செய்திகள் வெளிவந்தாலும் அது செய்தியாகவே கடந்து போகின்றது. ‛அரசியல் மாற்றம் இப்ப இல்லைனா எப்பவும் இல்லை' என அதிரடியாகவும் கூறினார். இந்நிலையில், விஜயதசமி நாளன்று கட்சி தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால், அந்த நாளும் கடந்துபோகவே, அடுத்த சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட ரஜினி தன் முடிவை அறிவிக்கவில்லை என பலரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று ரஜினி எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று பதிலளித்த ரஜினி, ‛அது என்னுடைய அறிக்கை அல்ல, ஆனால் அதில் வந்திருக்கும் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்து உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்,' என்றார். இதற்கிடையே டுவிட்டரில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஷ்டேக் டிரண்டானது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சி தொடங்காத ரஜினிக்கு இப்போதிருந்தே அவருக்கு ஓட்டுப்போட தயார் என்னும் ஆதரவை ரஜினி ரசிகர்கள் தெரிவிப்பது ரஜினிக்கு புது உத்வேகமாக தான் இருக்கும். இதனால், கட்சி வேலைகளை துரிதப்படுத்தி விரைவில் தொடக்கவிழாவை நடத்த ஆண்டவன் கட்டளை இடுவாரா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆனாலும், ரசிகர்கள் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்னும் ஹேஷ்டேகை டுவிட்டரில் டிரண்டாக்கி அவரின் அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE