நியூயார்க் : அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் தான், அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிக அதிக செலாவாகும் தேர்தலாக அமைந்துள்ளது. இதில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 3ல் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்திலையில், அமெரிக்காவில் தேர்தல் ஆய்வு அமைப்பான, 'சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பாலிடிக்ஸ்' வெளியிட்டுள்ள அறிக்கை:

அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் தான், மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, தேர்தல் வரலாற்றில் அமைய உள்ளது. இந்த தேர்தலுக்கு, 81 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தெரிய வந்துள்ளது. கடந்த, 2016ல் நடந்த தேர்தலில் ஏற்பட்ட செலவை விட, இது இரு மடங்கு அதிகம். மேலும், நன்கொடை வாயிலாக, 6,650 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்ற, முதல் அதிபர் வேட்பாளராக, ஜோ பிடன் உள்ளார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுப் பெட்டியில் தமிழ்
அமெரிக்காவில், அதிபர் தேர்தல், நவம்பர், 3ல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு, சில நாட்களே உள்ளதால், தேர்தல் நடக்கும் மையங்களுக்கு, ஓட்டுப் பெட்டிகளை அனுப்பிவைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஓட்டுப் பெட்டியில், தமிழ் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 'ஓட்டுச் சீட்டை இங்கே போட வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE