அரசியல் களம்: உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிஜகா!| Dinamalar

அரசியல் களம்: உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி'ஜகா!'

Updated : அக் 30, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (37) | |
'நாடே, 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடிக்கும்' என, ஆவலுடன் காத்திருந்த ரஜினியின் புதிய கட்சி குறித்த யூகங்கள், நேற்று, சென்னையை புரட்டி போட்ட கனமழையில் புஸ்வாணமாகின. 'உடல்நல பிரச்னைகள் காரணமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, ஆலோசித்து முடிவெடுப்பேன்' என, ரஜினி, 'ஜகா' வாங்கி விட்டார். இதற்காகவே காத்திருந்தது போல, உற்சாகமான தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அடுத்த சில நிமிடங்களில்,
அரசியல் களம்:உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி'ஜகா!'

'நாடே, 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடிக்கும்' என, ஆவலுடன் காத்திருந்த ரஜினியின் புதிய கட்சி குறித்த யூகங்கள், நேற்று, சென்னையை புரட்டி போட்ட கனமழையில் புஸ்வாணமாகின. 'உடல்நல பிரச்னைகள் காரணமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, ஆலோசித்து முடிவெடுப்பேன்' என, ரஜினி, 'ஜகா' வாங்கி விட்டார். இதற்காகவே காத்திருந்தது போல, உற்சாகமான தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அடுத்த சில நிமிடங்களில், தன் பிரசார கூட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா களேபரங்களுக்கு மத்தியிலும், அனைத்து கட்சிகளும், தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன.


நெடுநாளைய கனவுஆளுமை மிக்க தலைவர்களான, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல், தமிழகம் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. அ.தி.மு.க., தரப்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சும், தி.மு.க., தரப்பில், ஸ்டாலினும் களத்தில் நிற்கின்றனர்.நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, அரசியல் களத்தில் வலம் வரும் ஸ்டாலின், மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்ற பதவிகளை வகித்திருந்தாலும், அவரது நெடுநாளைய கனவான முதல்வர் பதவியை, இந்த தேர்தல் வாயிலாக அடைய வேண்டும் என்று திட்டமிட்டு, காய்களை நகர்த்தி வருகிறார்.

தொடர்ந்து, 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக தி.மு.க., இருப்பதால், மக்களிடம் இருக்கும் பரிதாபம், ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு அலைகள், இந்த கனவை நனவாக்கும் என்றும், அவர் நம்பியுள்ளார்.ஆனால், அவரது துாக்கத்தை கெடுக்கும் விஷயமாக, நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, 'புதிய கட்சி துவங்குவேன்' என, அறிவித்த ரஜினி, 2019 லோக்சபா தேர்தலில், கட்சி துவக்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மோடி என்ற பிரமாண்ட அலை முன், தன் புதிய கட்சி, பத்தமடை பாயாக சுருண்டு விடுமோ என கருதிய ரஜினி, '2021 சட்டசபை தேர்தல் தான் என் இலக்கு' என, சாதுர்யமாக, 'ரிவர்ஸ் கியர்' போட்டார்.


பேராபத்துஇந்த ஆண்டு மத்தியில், அவர் கட்சி துவக்க திட்டமிட்டிருந்த சூழலில், சீனப் பெருஞ்சுவராக கொரோனா குறுக்கே வந்தது. இதனால், சினிமா படப்பிடிப்பு, அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு எல்லாவற்றையும் ஒத்தி வைத்த ரஜினி, 'இ - பாஸ்' எடுத்து, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில், ஓய்வெடுக்க போய் விட்டார்.இதற்கிடையில், ரஜினி கட்சி துவக்கினால், அது, தி.மு.க.,வுக்கே பேராபத்தாக முடியும் என, அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர். ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகளும், இரண்டு திராவிட கட்சிகளை பிடிக்காத இளைஞர்களின் ஓட்டுகளும், எளிமையானவர் என, பெயர் எடுத்த ரஜினிக்கு விழும் என்றும், அவர்கள் கூறினர்.

இதனால், தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில், ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை விடவும், பெரிய ஓட்டையை, ரஜினியின் புதிய கட்சி போட்டு விடும் என, தி.மு.க., முன்னணியினர் கருதினர்.எப்படி கூட்டிக் கழித்து, பெருக்கி, வகுத்துப் பார்த்தாலும், 2021ல் ரஜினி களத்தில் குதித்து விட்டால், அவரது கட்சி, ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ, தி.மு.க., ஆட்சியை பிடிப்பதும், ஸ்டாலின் முதல்வராவதும், குதிரை கொம்பாகி விடும் என்றே, அரசியல் நோக்கர்கள் கருதினர்.இதற்கிடையில், ரஜினி, நவம்பரில் கட்சி துவங்குகிறார், டிசம்பரில் துவங்குகிறார் என்ற தகவல்களும், ஸ்டாலினுக்கு கலக்கத்தை கொடுத்து வந்தன. இதனால், தேர்தல் பணிகளை துவக்காமல், அமைதியாகவே இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், ரஜினியின் பெயரில் சமூக வலைதளங்களில், ஒரு தகவல் உலா வந்தது. அதில், 'ரஜினிக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் இருப்பதால், அவர் தற்போது, கட்சி துவங்க மாட்டார்' என்ற ரீதியில் இருந்தது. இந்த தகவலுக்கு, இரண்டு நாட்களாக, ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு வெளிவரவில்லை.நேற்று திடீரென, 'டுவிட்டரில்' இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, 'அந்த கடிதம் என்னுடையது இல்லை. ஆனால், அதில் என் உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மை. என் அரசியல் நிலைப்பாடு குறித்து, ஆலோசித்து உரிய நேரத்தில் முடிவெடுப்பேன்' என, தெரிவித்திருந்தார்.


சூசகம்இதன் வாயிலாக, 'சட்டசபை தேர்தலில், நான் களம் இறங்கவில்லை' என்பதை ரஜினி சூசகமாக தெரிவித்து விட்டார். ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கும், அவருடன் கூட்டணி வைக்க துடித்த கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.அதே நேரம், தி.மு.க., தரப்பில், 'ஸ்வீட் எடு; கொண்டாடு' கதையாக, உற்சாக அலைகள் கரைபுரண்டோடத் துவங்கி விட்டன. குறிப்பாக, ஸ்டாலின் மிகுந்த உற்சாகமாகி விட்டார்.'அண்ணன் வர மாட்டார், திண்ணை காலி' என்பது போல, அடுத்த சில நிமிடங்களில், சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களுக்கான அறிவிப்பை, ஸ்டாலின் வெளியிட்டு விட்டார்.இதன்படி, நவ., 10ம் தேதி முதல், அவரது பிரசார பயண கூட்டங்கள், காணொலி காட்சி வாயிலாக நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன் ரஜினி பேசியது என்ன?* சிஸ்டத்தை மாற்ற வேண்டும்!

நாள்: 2017 டிச., 31

நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது, காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலில், தனிக்கட்சி துவக்கி, தமிழகம் முழுக்க, 234 தொகுதியிலும் நாம் நிற்போம். பெயருக்கோ, பணம், புகழுக்கோ, பதவிக்கோ, நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியல் கெட்டுப் போச்சு; ஜனநாயம் சீர்கெட்டு போச்சு. ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழர்களையும் தலைகுனிய வைத்து விட்டன. மற்ற மாநிலத்தினர் நம்மை பார்த்து சிரிக்கின்றனர். இப்போது, இந்த முடிவை எடுக்காவிட்டால், என்னை வாழ வைத்த, தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியாக நல்லது செய்யவில்லை என்ற குற்ற உணர்வு, என்னை சாகும் வரை விடாது. அரசியல் மாற்றத்திற்கு நேரம் வந்தாச்சு. சிஸ்டத்தை மாற்ற வேண்டும்.

* ஆன்மிக அரசியல்!

நாள்: 2018 மார்ச் 5

எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, திரையுலகில் இருந்து தான் வந்தனர். ஆனால், இப்போதுள்ள ஆட்சியாளர்கள், சினிமா பிரமுகர்களை வெறுக்கின்றனர். அரசியலுக்கு இன்னொரு நடிகர் வரக்கூடாது என்கின்றனர்.நான், என் வேலையை சரியாக செய்கிறேன். ஆட்சியாளர்கள், அவர்களின் வேலையை சரியாக செய்யவில்லை. அரசியல் பூப்பாதை இல்லை. அது கற்கள், முள் மற்றும் பாம்பு நிறைந்த பாதை. தெரிந்தும் மக்களுக்கு நல்லது செய்யவே, அரசியலுக்கு வருகிறேன்.உண்மையான, நேர்மையான, அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல். துாய்மை தான் ஆன்மிகம். இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல். ஆன்மிக அரசியலை, இனிமேல் தான் பார்க்கப் போகிறீர்கள்.

* கட்சிக்கு மட்டுமே தலைவர்!

நாள்: 2020 மார்ச், 12:

ஜெயலலிதா இறந்த பின், தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. யார் ஆட்சி செய்வது என சண்டை வந்தது; அது தான் வெற்றிடம். இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என, எண்ணினேன். சிஸ்டத்தை சரியாக்காமல், அரசியலில் இறங்கினால் தவறு.தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., பெரிய கட்சிகள். அவர்கள் தங்கள் திட்டப்படி, தேர்தலுக்கு நினைத்தை செய்வர். ஆட்சிக்கு வந்ததும், பதவியில் இருப்போர், டெண்டரில் துவங்கி பல முறைகேடுகளை செய்வர். இதை, பலர் தொழிலாக செய்து வருகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால், இதை செய்யக்கூடாது.
மாநில கட்சிகளில், ஆட்சி, கட்சி இரண்டுக்கும், ஒருவரே தலைவர்; இதை மாற்ற வேண்டும். கட்சிக்கு ஒருவர்; ஆட்சிக்கு ஒருவர் என்ற, முடிவை எடுத்துள்ளேன். நான் முதல்வராக மாட்டேன். நல்லவரை முதல்வராக தேர்வு செய்வேன். நான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன். - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X