பருவ மழையால் மிதந்தது சென்னை: அவலத்துக்கு காரணம் யார்?| Dinamalar

பருவ மழையால் மிதந்தது சென்னை: அவலத்துக்கு காரணம் யார்?

Updated : அக் 31, 2020 | Added : அக் 29, 2020 | கருத்துகள் (28) | |
சென்னை: நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகளில், பொதுப்பணி துறை அலட்சியம் காட்டியதால், ஒரு நாள் மழைக்கே, சென்னை மிதக்க துவங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால், அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனவே, பருவ மழைக்கு முன்பாக, இம்மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்
மிரட்டியது மழை; மிதந்தது சென்னை:  அவலத்துக்கு காரணம் யார்?

சென்னை: நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகளில், பொதுப்பணி துறை அலட்சியம் காட்டியதால், ஒரு நாள் மழைக்கே, சென்னை மிதக்க துவங்கியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால், அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனவே, பருவ மழைக்கு முன்பாக, இம்மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.


இதனால், மழைநீர் எளிதாக கடலில் சென்று கலந்து விடும். இப்பணிகளுக்கு, நடப்பாண்டில், 9.90 கோடி ரூபாயை, ஜூலை, 2ம் தேதி அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில், அடையாறு, கூவம், வெள்ளாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், அம்பத்துார், கொரட்டூர், புழல் ஏரிகளின் உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட, 90 நீர்வழி தடங்களை துார்வாருவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கான பணிகள், 14 'பேக்கேஜ்' அடிப்படையில், ஒப்பந்த நிறுவனங்களிடம், ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. அக்., மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் என தெரிந்தும், உடனடியாக பணிகளை, ஒப்பந்த நிறுவனங்கள் துவங்கவில்லை. டிச., மாதம் பருவ மழை முடியும் வரை, இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதனால், 'பொக்லைன்' வாகனங்களை துார்வாரும் பணிகளில், முன்கூட்டியே பயன்படுத்தினால், வாடகை செலவு அதிகரிக்கும். மழை துவங்கினால், நீரில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் அனைத்தும், அடித்து செல்லப்படும் என, ஒப்பந்த நிறுவனங்கள் கணக்கு போட்டன. இதை மனதில் வைத்து, இம்மாதம் தான் நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் துவங்கின; அதுவும் முழுவீச்சில் நடக்கவில்லை. இதனால், வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளே, சென்னையில், 20 செ.மீ., மழை பதிவானது.நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. நீர் வழித்தடங்களை துார்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இனியாவது, மிதவை பொக்லைன் வாகனங்களை பயன்படுத்தி, துார்வாரும் பணிகளில், ஒப்பந்த நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் தாமதம் காட்டினால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், நீரில் தத்தளிக்கும் அபாயம் உள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்து விட்டனர். இது, தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,விற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
எனவே, அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது, முதல்வர் இ.பி.எஸ்., கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


அவலத்துக்கு காரணம் யார்?சென்னையில், நேற்று முன்தினம் இரவு, விடிய விடிய பெய்த கன மழையால், பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாகின. மழைநீர் தேங்கியதற்கு, மழைநீர் வடிகால் அடைப்பு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.சென்னையில், 2015ல், பெய்த கன மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், மழைநீர் வடிகால் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு நீக்குதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, ஆண்டுதோறும் மாநகராட்சியால், 30 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கன மழையால், பெரும்பாலான சாலைகளில், மழைநீர் தேங்கியது. குறிப்பாக, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் இரண்டு அடிக்கு மேல் தேங்கியது. நேற்று காலை, 11:00 மணி வரை, சாலைகளில் மழைநீர் வடியாததால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

பெரும்பாலான வாகனங்களில், மழைநீர் புகுந்து பழுதடைந்து, பாதியில் நின்றன. மேலும், சாலைகளும் குண்டும், குழியுமாக மாறின. இதற்கிடையே, அண்ணா சாலை, அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியதற்கு, நெடுஞ்சாலை துறை தான் காரணம் என, மாநராட்சி தரப்பில் கூறப்படுகிறது. அண்ணா சாலையில், மழைநீர் வடிகால் கட்டும் பணி, தற்போது தான் துவக்கப்பட்டுள்ளது.இதுவே, அண்ணா சாலை மற்றும் சுற்று வட்டாரங்களில் மழைநீர் தேங்க, முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலான சாலைகளில், மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அந்த அடைப்புகளை, மாநகராட்சி பணியாளர்கள் நீக்கியதன் காரணமாகவும், மோட்டார் பம்புகள் வாயிலாக அகற்றியதன் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க, மாநகராட்சி சார்பில், அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 044 -- 2538 4530; 2538 4540 என்ற எண்களிலும், '1913' என்ற கட்டுப்பாட்டு மையத்தையும், பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X